யேமெனில் திருமண நிகழ்வு கட்டடம் மீது கூட்டணிப் படையின் வான் தாக்குதல்! : 20 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை யேமெனின் வடமேற்கு மாகாணமான ஹஜ்ஜவில் திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த கட்டடம் மீது சவுதி தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகளின் வான் தாக்குதலுக்கு இலக்காகி 20 பேர் பலியானதாகவும் 40 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வான் வழித் தாக்குதலைத் தாம் நடத்தவில்லை என சவுதி மறுத்துள்ள நிலையில் காயமுற்றவர்களில் பலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப் படுகின்றது. யேமெனில் சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த அதிபர் ஹைதியின் ஆட்சியில் இருந்து அவரை அகற்றி ஹௌத்தி கிளர்ச்சிப் படை தலைநகர் சனாவைக் கைப்பற்றியத அடுத்து 2015 மார்ச் முதல் அங்கு உள்நாட்டுப் போர் இடம்பெற்று வருகின்றது.

இப்போரில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும் வளைகுடா கூட்டணி நாடுகளும் ஹௌத்திக்களை எதிர்த்து வான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. பதிலுக்கு ஹௌத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றது. 2017 டிசம்பர் வரையிலான கணக்கெடுப்பின் படி யேமென் உள்நாட்டுப் போரில் 5200 இற்கும் அதிகமான பொது மக்களுடன் சுமார் 13 600 மக்கள் கொல்லப் பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.

-4tamilmedia.com