கொரிய எல்லையில் கிம் ஜாங்-உன்னை சந்திக்கவுள்ள மூன் ஜியே-இன்

உச்சி மாநாடு பற்றிய இறுதி விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், 1953ம் ஆண்டு நிறைவடைந்த கொரிய போருக்கு பின்னர், தென் கொரிய எல்லைக்குள் செல்கின்ற முதல் வட கொரிய அதிபராக கிம் ஜாங்-உன் மாறயிருக்கிறார்.

வெள்ளிக்கிழமையன்று காலை 9.30 மணிக்கு கொரிய எல்லையில் தென் கொரிய தலைவர் மூன் ஜியே-இன் தனியாக கிம் ஜாங்-உன்னை சந்திக்கவுள்ளார்.

அணு ஆயுதங்களை கைவிடலாம் என்று வட கொரியா சமீபத்தில் காட்டியுள்ள சமிக்கைகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேச்சுவார்த்தை கவனம் செலுத்தும்.

பல ஆண்டுகளாக இருந்து வந்த பதற்றத்திற்கு பின்னர், இந்த உச்சி மாநாடு ஒரு திருப்புமுனையை அளிக்கும் என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வட மற்றும் தென் கொரியாக்களுக்கு இடையில் தெளிவாக வரையறுக்கப்பட்ட ராணுவ எல்லை கோடான அதிகாரபூர்வ எல்லையை கடந்து கிம் ஜாங்-உன் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்.

இருப்பினும் அவர் ராணுவ இல்லாத எல்லை பகுதியில்தான் கிம் ஜாங்-உன் இருப்பார்.

இந்த இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக ஆகிவிட்ட நிலையில், வட கொரியாவின் அணு மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்கள் மிகவும் முன்னேறிவிட்டதால் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வட கொரியாவோடு இப்போது ஒப்பந்தம் செய்துவிட முயல்வது மிகவும் கடினமாக இருக்கும் என்று சோல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“அணு ஆயுத ஒழிப்புக்கு விருப்பம் தெரிவித்து, இந்த இரு நாட்டு தலைவர்களும் எவ்வகை ஒப்பந்தத்திற்கு வர முடியும் என்பது கடினமே” என்று தென் கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் ஜாங்-சியோக் கூறியுள்ளார்.

2000 மற்றும் 2007ம் ஆண்டுகளில் நடைபெற்ற இதுபோன்ற உச்சி மாநாடுகளை போல நடைபெறுகின்ற இந்த சந்திப்பு, இரு கொரியாக்களுக்கு இடையிலான உறவில் பல மாதங்கள் மேம்பட்ட உறவின் விளைவாக வந்துள்ளது.

இதுவே, கிம் ஜாங்-உன்னுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இடையில் சந்திப்பு நடக்கக்கூடிய சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.

அணு சோதனைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக கிம் ஜாங்-உன் கடந்த வாரம் அறிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாறை இடிந்து விழுந்த பின்னர் வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தளம் மீண்டும் பயன்படுத்தாத நிலையில் இருக்கலாம் என்று சீன ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தாலும், வட கொரியாவின் அறிவிப்பை ஒரு நல்லெண்ண விடயமாக அமெரிக்காவும், தென் கொரியாவும் வரவேற்றிருந்தன.

வட கொரியாவின் அணு ஆயுத குறிக்கோள்களும், 1950 முதல் 53 வரை நடைபெற்று நிறைவடைந்த கொரிய போருக்கு பின்னர் கொரிய தீபகற்பத்தில் அமைதி வழியை பற்றிய முறையான உரையாடல் மற்றும் பொருளாதார, சமூகப் பிரச்சனைகளை பற்றி தொடர் விவாதம் ஆகியவை இந்த கூட்டத்தில் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த உச்சி மாநாடு நடைபெறுவதால் ஒரு நாள் நடைபெறுகின்ற ராணுவ ஆண்டு பயிற்சிகளை ரத்து செய்வதாக தென் கொரியாவும், அமெரிக்காவும் கூறியுள்ளன.

உச்சி மாநாட்டின் விவரங்கள்

நிகழ்ச்சிநிரல் பட்டியல் முதல் விருந்து வரையான இந்த மாநாட்டின் எல்லா விபரங்களும் தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளன.

கொரிய எல்லையிலுள்ள ராணுவ எல்லை கோட்டை அடையாளப்படுத்தும் காங்கிரீட் அமைப்புகளில் 9 அதிகாரிகளை கொண்ட பிரதிநிதிகளோடு தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன், வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னை சந்திப்பார் என்று வியாழக்கிழமை செய்திளார்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. -BBC_Tamil