இரான் அணு ஆயுதங்கள் பெறுவதை தடுப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்பை ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் வலியுறத்தியுள்ளார்.
2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்கவில்லை என்றால் போர் மூளும் அபாயம் உள்ளதாக பிபிசியிடம் பேசிய கட்டெரஸ் தெரிவித்தார்.
தன் மீதான தடைகளை நீக்குவதற்கு பிரதிபலனாக அணுத் திட்டத்தை கைவிட 2015ஆம் ஆண்டு இரான் ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தை டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அணுஆயுத ஒப்பந்தத்தில் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்க டிரம்பிற்கு வரும் மே 12ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது.
இந்நிலையில், இரானுடனான இந்த உடன்படிக்கை “ஒரு முக்கிய ராஜதந்திர வெற்றி” என்று குறிப்பிட்ட கட்டெரஸ், இது தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றார்.
“இதற்கு நல்ல மாற்று இல்லாமல் இதனை அகற்றக் கூடாது” என்று கூறிய அவர், அப்படி செய்தால் அபாயகரமான சூழலை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, அணு ஆயுத திட்டத்தை இரான் ரகசியமாக தொடர்ந்து வந்துள்ளதை நிரூபிக்கும் “ரகசிய அணு கோப்புகள்” என்ற சில கோப்புகளை இஸ்ரேல் வெளியிட்டது.
இரான் அணுசக்தி ஒப்பந்தம்
2015ம் ஆண்டு இரானுக்கும், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய ஆறு நாடுகளுக்கு இடையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு பதிலாக தன் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்று இரான் கோரியது.
இந்த ஒப்பந்தத்தின்படி, யுரேனியம் செறிவூட்ட பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், அதன் மையப் பகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க இரான் உறுதியளித்தது.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமா காலத்தில் எட்டப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக்கொள்ள போவதாக அதிபர் டிரம்ப் ஏற்கனவே தெரிவித்திருந்தார். -BBC_Tamil