அமெரிக்காவின் ‘ஆத்திரமூட்டல்’ அமைதியை அச்சுறுத்துகிறது – வட கொரியா

இரு நாடுகளும் வரலாற்று சிறப்புமிக்க உச்சி மாநாட்டிற்கு தயாராகி வரும் நிலையில் தங்களுக்கு எதிராக “அழுத்தம் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களை” பயன்படுத்துவது தொடர்பாக வட கொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அணுசக்தி ஆயுதங்களை கைவிடும் வரை பொருளாதார தடைகளை அகற்ற முடியாது என்று அமெரிக்கா தங்களை வேண்டுமென்றே தூண்டும் வகையில் செயல்படுவதாக வட கொரிய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் அடுத்த சில வாரங்களில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இருநாடுகளின் தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கிடையே போர் சூழல் பதற்றம் பல மாதங்களாக நிலவி வந்த சூழ்நிலையில், கடந்த மாதம் தங்களது நாடுகளின் எல்லைப்பகுதியில் சந்தித்துக்கொண்ட வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவதற்கு உறுதிபூண்டனர்.

கடந்த 1953ஆம் ஆண்டு கொரிய போர் நிறைவுற்ற பிறகு தென் கொரிய மண்ணில் கால் வைத்த முதல் வட கொரிய தலைவர் என்ற பெயரை கிம் ஜாங்-உன் பெற்றார்.

அமெரிக்காவின் 'ஆத்திரமூட்டல்' அமைதியை அச்சுறுத்துகிறது - வட கொரியா

பொதுவாகவே அமெரிக்கா மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தும் வட கொரியா, இருநாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் மாநாடு சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில் அவ்வாறான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை குறைத்து கொண்டுள்ளது.

இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவலானது இருநாடுகளுக்கிடையேயான சந்திப்பு அவ்வளவு எளிதில் நடைபெறாதோ என்று சந்தேகமூட்டுவதாக பிபிசியின் ஆசிய ஆசிரியர் மைக்கேல் பிரிஸ்டோவ் கூறுகிறார்.

அமெரிக்கா தான் ஏற்படுத்திய பொருளாதார தடைகள் மற்றும் அழுத்தங்களின் காரணமாகவே வட கொரியா அணுஆயுதமற்ற தீபகற்பம் என்ற உறுதிமொழியை ஏற்பதற்கு காரணம் என்ற “தவறான கருத்தை” உருவாக்குவதாக வட கொரிய கூறுகிறது என்று கேசிஎன்ஏ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் அங்கு ராணுவத்தை குவித்து எரிச்சலூட்டும் செயலை அமெரிக்கா செய்து வருவதாக அதில் வட கொரியா மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது.

“வரலாற்று சிறப்புமிக்க வட-தென் கொரிய தலைவர்கள் சந்திப்பு மற்றும் பன்முஞ்சோம் உடன்படிக்கையின் காரணமாக கொரிய தீபகற்பம் அமைதி மற்றும் சமரசத்தை நோக்கி பயணிக்கும் வேளையில், அமெரிக்கா எங்களை வேண்டுமென்றே எரிச்சலூட்டும் வகையில் செயல்படுகிறது” என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 'ஆத்திரமூட்டல்' அமைதியை அச்சுறுத்துகிறது - வட கொரியா

பலகட்ட முயற்சிக்கு பிறகு இருநாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடக்கும் சூழ்நிலையை குலைக்கும் வகையில் அமெரிக்காவின் செயல்பாடு உள்ளதாகவும், தங்களது அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளை பலவீனமாக அமெரிக்கா நினைப்பது சுமுக தீர்வு ஏற்படுவதற்கு உதவாது என்றும் அந்த அறிக்கையில் வட கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் ஏனைய அழுத்தங்கள் தொடருமென்றும், தனது கடுமையான நிலைப்பாடே நல்லிணக்கத்தை எளிதாக்க உதவியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். -BBC_Tamil