டைம்: ஹரப்பான் வெற்றி பெறும், ஆனால்…

மக்களிடமிருந்து பெற்ற கருத்துகள் அடிப்படையில் பக்கத்தான் ஹரப்பான் நாளை நடைபெறும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் என்று முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஸைனினுடின் கூறினார்.

ஆனால், பிஎன் புத்ரா ஜெயாவை அதன் பிடியில் வைத்துக்கொள்வதற்கு அதனால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

நான் எங்கு சென்றாலும் தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்ற கேள்வி இருந்தது. நான் ஹரப்பான் என்று அவர்களிடம் கூறுவதுண்டு.

மாற்றத்திற்கான மனப்பாங்கு மக்களிடம் இருக்கிறது, மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஆனால், நாம் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் இந்த பராமரிப்பு அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யும் என்று லங்காவில் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

நஜிப்புக்கு ஆலோசனை கூறினேன்

பக்கத்தான் ஹரப்பான் பரப்புரைகளில் பங்கேற்பதற்கு முன்பு நாட்டை நிருவாகம் செய்வது குறித்து பிரதமர் நஜிப்புக்கு ஆலோசனை கூறினேன்.

நஜிப்பும் நானும் நண்பர்கள். ஆலோசனை கூறுவதற்கு குறிப்பிட்ட வழிகள் இருக்கின்றன. ஆனால் அதை எல்லாம் நான் வெளிப்படுத்த முடியாது என்றார் டைம்.

நாட்டின் எதிர்காலத்திற்காகப் போராட தாம் மகாதிரின் பெர்சத்து கட்சியில் சேர வேண்டியதில்லை. மக்களுக்காக போராடவும் ஊழல் இல்லாதிருப்பதை உறுதி செய்வதற்காவும் நான் திரும்பி வந்தேன் என்று கூறிய டைம், நான் தொடர்ந்து மக்களுடன் இருப்பேன், தேர்தலுக்குப் பின்னரும் இருப்பேன் என்றாரவர்.

எதிர்காலத்தை மனதில் நிறுத்தி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று டைம் கேட்டுக்கொண்டார்.