தமிழ் தேசிய நிலைப்பாட்டை தோற்கடிக்க மூன்று வருடங்களாக முயற்சித்த இலங்கை ஜனாதிபதி..

தமிழ் தேசிய நிலைப்பாட்டை தோற்கடிப்பதற்காகவே தான் தலைமையிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கம் கடந்த மூன்று வருட காலப்பகுதியை செலவழித்துள்ளதாக ஸ்ரீலங்கா அரச தலைவர் தெரிவித்திருக்கின்றார்.

“பயங்கரவாதம்” என்று தமிழ் தேசிய நிலைப்பாட்டை அடையாளப்படுத்திய ஸ்ரீலங்கா அரச தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் இன்னமும் புலம்பெயர் நாடுகளில் தொடரும் இந்த பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக செயற்பட்டதாகவும் ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

ஸ்ரீலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன இந்தத் தகவல்களைத் முன்வைத்திருக்கின்றார்.

ஸ்ரீலங்காவின் எட்டாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வை ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன நேற்றையதினம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதற்காக நாடாளுமன்றத்திற்கு சென்ற ஸ்ரீலங்கா அரச தலைவரை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். இதன்போது பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டன.

இதனையடுத்து ஸ்ரீலங்காவின் எட்டாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்து உரையாற்றிய ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, பயங்கரவாதத்தை நாட்டிற்குள் இராணுவ ரீதியாக தோற்கடித்தாலும், அவர்களின் நிலைப்பாட்டை முழுமையாக தோற்கடிக்கும் முயற்சி இன்னமும் வெற்றிபெறவில்லை என தெரிவித்தார்.

உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சம உரிமையை உறுதிப்படுத்தி அரசியல் தீர்மானங்களை எடுக்கக்கூடிய கடடமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.

இந்த குறிக்கோளை அடைவதற்கு தற்போது நடைமுறையிலுள்ள மாகாண சபைகள் முறைமையை மேலுவும் வலுப்படுத்துவது அவசியம் என நான் நம்புகின்றேன்.

எவ்வாறான விமர்சனங்கள் இருந்தாலும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களையும் அவர்களின் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வுகளை முன்வைத்து மக்களின் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வொன்றை நடைமுறைப்படுத்துவதுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

நாட்டிற்குள் பயங்கரவாதத்தை நாம் முழுமையாக தோற்கடித்தாலும் அவர்களின் நிலைப்பாட்டை தோறக்கடிக்க எம்மால் முடியாது போயுள்ளது. அதனால் கடந்த மூன்றரை வருடங்களாக சர்வதேச ஒத்துழைப்புடன் தமிழ் தேசிய நிலைப்பாட்டை முழுமையாக தோற்கடிப்பதற்காக நான் முழுமையாக முயற்சிகளை மேற்கொண்டேன்.

இந்த முயற்சி வெற்றியளித்ததா என்பது குறித்து எந்த கருத்தையும் வெளியிடாத ஸ்ரீலங்கா அரச தலைவர் போருக்குப் பின்னரான சவால்களை வெற்றிகொள்வது பாரிய சவால்நிறைந்த விடையம் என்றும் ஏற்றுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு வாக்களித்த மக்கள் ஜனநாயகம், மனித உரிமை, சட்டத்தின் ஆட்சி மற்றம் பொறுப்புக்கூறும் சமூகமொன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே ஆணை வழங்கியிருந்தனர்.

தனது அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறும் போது மூன்று பிரதான சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டதாகத் தெரிவித்த மைத்ரிபால சிறிசேன, இந்த அனைத்துத் துறைகளிலும் வெற்றிகரமான பலன்களை அடைவதற்கு தனது அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாகவும் பெருமிதம் வெளியிட்டார்.

முதலாவது ஜனநாயகம் மற்றம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது. இரண்டாவது இனங்களுக்கிடையிலான நம்பிக்கை மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்பவது.

மூன்றாவது நாடு முகம்கொடுத்துள்ள பாரிய கடன்சுமையிலிருந்து நாட்டை மீட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது. நான்காவது நாம் இழந்திருந்த சர்வதேசத்தின் நம்பிக்கையை மீளப் பெறுவது. இந்த அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னெடுத்த திட்டங்கள் எமக்கு வெற்றியளித்துள்ளன.

தான் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைத்து தேசிய அரசாங்கமொன்றை அமைத்தமை வரலாற்றில் என்றும் நிகழாத பெரும் புரட்சியொன்று ஸ்ரீலங்கா அரச தலைவர் அடையாளப்படுத்தினார்.

எனினும் தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்த புரட்சிக்காக செய்தவற்றை பாராட்டாது விட்ட ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, முற்றிலும் மாறுபட்ட அரசியல் கொள்கைகளைக் கொண்ட தரப்பினரை இணைத்துக்கொண்டு இயங்கும் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் முழமையாக வெற்றிபெறவில்லை என்றும் கவலை வெளியிட்டார்.

-athirvu.com

TAGS: