பயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில், இரணைதீவைச் சேர்ந்த 187 குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. இரணைதீவு என்பது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்தின் கீழ் வரும், இரண்டு தீவுகளாகும்.
போரால் பாதிக்கப்பட்ட இரணைதீவில் காணப்பட்ட மக்கள், அங்கிருந்து 1992ஆம் ஆண்டில், முழங்காவிலுக்கு அருகில் காணப்படும் இரணைமாதா நகருக்குச் சென்று, இறுதியில் அங்கு, தற்காலிகக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். தங்களது காணிகளுக்கு மீளத் திரும்புவதற்காக, சுமார் ஓராண்டாகப் போராடிக் கொண்டிருந்த அம்மக்களின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஏப்ரலில் அம்மக்கள், தமது சொந்த மண்ணுக்குத் திரும்பத் தீர்மானித்தனர்.
பெரும்பாலும் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும் தமிழ் மக்களாகிய இவர்கள், தமது சொந்த மண்ணுக்குத் திரும்பும் போது, தாங்கள் ஒருகாலத்தில் வாழ்ந்த மண்ணுக்குத் திரும்புவது குறித்து, சிலர், மகிழ்ச்சியில் கண்ணீரை வெளிப்படுத்தினர். ஆனால், அவர்களில் பலருக்கு, காணி உறுதிகள் இல்லை என்பதோடு, தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு, அரசாங்கத்தின் ஆதரவு தேவைப்படுகிறது.
இரணைதீவுக்கான இப்பத்திரிகையின் அண்மைய விஜயத்தின் போது, ஒருகாலத்தில் மிகவும் செழிப்பாகக் காணப்பட்ட இத்தீவுகளை ஆராய்ந்ததோடு, அவற்றின் மக்களோடும் உரையாடக் கிடைத்தது.
மறக்கப்பட்ட தீவு
கடல்நீரால் பிரிக்கப்பட்டதாக, இரணைதீவில், பெருந்தீவு, சிறுந்தீவு என, இரண்டு தீவுகள் காணப்படுகின்றன. இதில் பெருந்தீவிலேயே, மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். வளச்செழிப்பு அதிகமாகக் காணப்படும் இத்தீவே, இப்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ள பகுதியாக மாறியுள்ளது.
45 நிமிட படகுப் பயணத்தைத் தொடர்ந்து, வடக்கில் மறக்கப்பட்ட இத்தீவுக்குச் செல்ல முடியும். கைவிடப்பட்ட பகுதி என்பதற்குச் சான்றாக, பச்சைப் பசேலென இது காணப்படுகிறது. மீன்பிடித் தொழிலில் தங்கியிருந்து, சிறந்து விளங்கிய சமூகம் என்பதற்குச் சான்றாக, தங்களது சொந்த இடத்துக்குத் திரும்பிச் சில நாள்களிலேயே, மீன்பிடிப்பதற்காகத் தங்கள் வலைகளை அவர்கள் வீசிக் கொண்டிருந்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.
1886ஆம் ஆண்டில் கட்டப்பட்ட வெளிச்சவீடு உள்ளிட்ட, குண்டுவீசப்பட்டு, கைவிடப்பட்ட கட்டடங்கள், அவற்றின் தொலைந்துபோன வரலாற்றைச் சிந்திக்க வைக்கின்றன. இத்தீவிலுள்ள பிரதான குடியிருப்பு இடமாக, செபமாலை மாதா தேவாலயம் காணப்படுகிறது. அங்கு காணப்படும் அன்னை மரியாள், யேசு கிறிஸ்துவின் பல சிலைகள், முன்பிருந்தே அங்கு உள்ளன.
பாடசாலையொன்று, வைத்தியசாலையொன்று, மூன்று நூலகங்கள், தேவாலயமொன்று, தபால் நிலையமொன்று, மீன்பிடி நிலையமொன்று என, இத்தீவில் அனைத்து வசதிகளும் காணப்பட்டிருந்தன. தங்களுடைய சொந்த நிலத்தில் தங்கள் வாழ்வை மீண்டும் ஆரம்பிக்க, 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு காத்திருக்கின்றன.
தீவைச் சுற்றிய ஆழமில்லா நீர்ப்பரப்பில், கடலட்டைகளும் சிப்பிகளும் ஏராளமான அளவில் காணப்படுவதோடு, கரையை அடிப்படையாகக் கொண்ட மீன்பிடியென்பது, பெண்களுக்கான வருமான வழிகளுள் ஒன்றாகக் காணப்பட்டது. இக்கடற்கரைப் பகுதியில் சுண்ணாம்புக்கற்களும் அதிகமாகக் காணப்படும் நிலையில், பல கடல்வாழ் உயிரினங்கள் பெருகுவதற்கான ஓர் இடமாகவும், தீவுகளிலும் பிரதான நிலப்பரப்பிலும், வீடுகளைக் கட்டுவதற்கான மூலப்பொருளைப் பெறக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
இடப்பெயர்வும் மீள்குடியேற்றமும் நிலத்துக்கான போராட்டமும்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்துமத விவகாரங்கள் அமைச்சின் தரவுகளின்படி, ஒக்டோபர் 2017 வரை, கிளிநொச்சி மாவட்டத்தில் 44,119 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளன. அதேபோன்று, தங்களின் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் வாழும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 729 குடும்பங்களைச் சேர்ந்த 2,395 பேர், இன்னமும் மீளக்குடியமர்த்தப்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.
1992ஆம் ஆண்டிலிருந்து, இரணைதீவைச் சேர்ந்த மக்கள், போரின் இறுதிக்கட்டம் உட்பட பல்வேறு தடவைகளில் இடம்பெயர வேண்டியேற்பட்டது.
இப்போதைய நிலையில், தீவின் சில பகுதிகளுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஓர் இடத்தில் வாழவேண்டிய கட்டுப்பாடே காணப்படுகிறது. எனினும், ஒருகாலத்தில் சிறந்து விளங்கிய மீன்பிடித்துறை, பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. இந்திய மீனவர்களும் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் மீனவர்களும் இப்பகுதிக்கு வருவதோடு, எரிபொருள் வீணாகுவதன் காரணமாக ஏற்படும் இழப்புகளும், பிரதான சவால்களாகக் காணப்படுகின்றன. ஜனாதிபதி (2017ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள்), பிரதமர், வடக்கின் முதலமைச்சர், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு ஆகியோரிடம் மேன்முறையீடுகளை முன்வைத்த போதிலும், நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை. மே 2017இல், அப்பகுதி மக்களால் இரணைமாதா நகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதோடு, அது பூநகரி, கிளிநொச்சி, பின்னர் கொழும்புக்குக்கூட கொண்டு செல்லப்பட்டன. இப்போராட்டங்களின் விளைவாக, சமூகத் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமிடையிலான பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. ஆனால், எவ்வித முன்னேற்றத்தையும், பொதுமக்கள் காணவில்லை.
இரணைதீவிலுள்ள மக்கள், தங்கியிருப்பதற்காக, தேவாலயத்தை மாத்திரம் நாடுகிறார்கள் என்பதை, அங்கு விஜயம் செய்ததன் பின்பு, தமிழ்மிரர் அறிந்துகொண்டது. ஏனைய அனைத்துக் கட்டடங்கள் மீதும் குண்டு வீசப்பட்டு, அவற்றுக்குக் கூரைகள் காணப்படவில்லை. ஆகவே, தேவாலயத்தின் மூலையின், அன்னை மரியாளின் நேர்த்தியான சிலைக்குக் கீழ், தங்களது உடைமைகளை, அவர்கள் நேர்த்தியாக வைத்திருந்தனர்.
தீவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சிதறிக் காணப்படுவதோடு, தங்கள் சொந்த மண்ணில் தங்களை மீண்டும் பழக்கப்படுத்திக் கொள்வதற்காக, அங்குமிங்கும் நடந்து திரிவதையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.
‘உறுதியையும் ஏனைய ஆவணங்களையும் விட்டுச் சென்றேன்’
2008ஆம் ஆண்டில் தீவிரமடையத் தொடங்கிய முள்ளிவாய்க்கால் போரைத் தொடர்ந்து, தமது பகுதிகளிலிருந்து, அனைத்து ஆவணங்களையும் விட்டுவிட்டு வெளியேறியவர்களுள், ஜெயசீலன் எலிசபெத்தும் ஒருவர். “காணி உறுதிகளையும் ஏனைய ஆவணங்களையும், நானும் விட்டுவிட்டுச் சென்றேன். ஆனால், என்னிடம் என்னுடைய அடையாள அட்டை இருக்கிறது. சிலரிடம், உறுதிகளும் இருக்கின்றன. ஆனால், எம்முடைய வீடுகளை மீண்டும் நிர்மாணிப்பதற்கு, பொருட்களும் உதவியும் எமக்குத் தேவை. தீவின் சில பகுதிகளுக்குச் செல்வதற்கு, கடற்படை எம்மை அனுமதிப்பதில்லை. ஆகவே, இவ்விடத்தில் நாம் இருக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
‘அரசாங்கம் உதவ வேண்டும்’
தமது வாழ்வை ஆரம்பிக்க முயலும் இம்மக்கள், மரக் குற்றிகளிலிருந்தும் மரங்களிலிருந்தும், தற்காலிகக் கூடாரங்களை அமைக்க ஆரம்பித்துள்ளனர். ஒன்பது பிள்ளைகளின் தாயாரான வேதநாயகம் கனிகைமலர், பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது வீட்டுக்காகப் போடப்பட்ட அத்திபாரத்தில் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.
“எமது வீட்டை, இங்கு தான் அமைக்க முடியுமென நாம் நினைத்தோம். ஆனால் இப்போது, எனது பிள்ளைகள் தான், இக்கூடாரங்களை அமைக்கத் தொடங்கியிருக்கின்றனர். இத்தீவைப் பார்வையிட வருவோருக்காகக் கடைகளை அமைத்து, அதன்மூலம் வருமானமீட்ட அவர்கள் எதிர்பார்க்கின்றனர். என்னுடைய இரண்டு பிள்ளைகளைக் காணவில்லை; அவர்களுள் ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தார். என்னுடைய கணவர், மிகவும் வயதானவர். எனவே, நான் தான், எங்கள் குடும்பத்துக்காக உழைக்க வேண்டியுள்ளது. எங்களுடைய வீடுகளை நிர்மாணிக்க உதவுமாறும், எங்களுடைய வாழ்வாதாரத்துக்கு உதவுமாறும், அரசாங்கத்தை நான் கோருகிறேன்” என அவர் தெரிவித்தார்.
‘ஒரு குடும்பத்துக்கு ஓர் ஏக்கர் தான்’
“1991ஆம் ஆண்டில், கடற்படையால் 45 பேர் பிடித்துச் செல்லப்பட்டு, 3 நாட்களின் பின்னர் அவர்கள் திரும்பினர்” என, செபஸ்டி சந்தியா ஞாபகப்படுத்தினார். “1992ஆம் ஆண்டில், பிரதான நிலப்பரப்புக்கு நாம் சென்று, தற்காலிகக் கூடாரங்களில் வசிக்கத் தொடங்கினோம். எங்களுக்கு வீட்டுத் திட்டமொன்று வழங்கப்பட்டது, ஆனால், சுமார் 470 குடும்பங்களுக்கான வீடுகளை அமைப்பதற்கான இடம் காணப்படவில்லை. அதைவிட மேலதிகமாக, ஒரு குடும்பத்துக்கு ஓர் ஏக்கர் காணி தான் வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் 5 பிள்ளைகள் காணப்பட்டால், இந்த ஓர் ஏக்கரும், 5 பிள்ளைகளுக்கிடையில் பகிரப்பட வேண்டும்; பேரப் பிள்ளைகளுக்கென்று நிலமேதும் இருக்காது. ஆகவே இவ்விடயத்தை, மேலும் திறந்த மனதுடன் அதிகாரிகள் நோக்க வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
‘சமாதானத்துடன் வாழ விரும்புகிறோம்’
போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு குடும்பங்களில், சந்தியா அருள்தேவியும் உள்ளடங்குகிறார். “பிரதான நிலப்பரப்பில் நாங்கள் இருந்த போது, கூலி வேலை செய்து, நாளாந்தம் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை பெற்றோம். ஆனால் இப்போது, பிரதான நிலப்பரப்புக்குச் சென்று, நாங்கள் மீன்பிடிக்க வேண்டியிருக்கிறது. இதனால் செலவாகும் மண்ணெண்ணெயின் அளவு அதிகம். கடலட்டைகளும் சிப்பிகளும் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன, இவற்றைப் பிடித்து, நல்ல வருமானத்தைப் பெறலாம். இங்கு திரும்பியமை தொடர்பில், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இப்போது நாங்கள், சமாதானமாக வாழ விரும்புகிறோம்” என்றார்.
‘இத்தீவுக்கு வருவோர் உணவைக் கொண்டுவருகின்றனர்’
இத்தீவை, பவுல்தாசா விசிரிதம்மா, எமக்குச் சுற்றிக் காட்டினார். “தேவாலயத்தின் கூரை மீதும் குண்டுபட்டிருந்தது. கடற்படை அதை நிர்மாணிக்கத் தொடங்கியது. ஆனால் சிறிது காலத்தின் பின்னர், அவர்கள் அப்பணியை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இப்போது அது, பாதியளவு நிறைவடைந்த வேலையாக இருக்கிறது. எங்கள் பாதிரியாரின் ஆசீர்வாதம் எங்களுக்கு உண்டு. எமது சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப நாங்கள் விரும்புகிறோம். இத்தீவுக்கு வருவோர், எமக்கு உணவைக் கொண்டு வருகின்றனர். இத்தீவில் எமக்கு, ஒழுங்கான குடிநீரும் இல்லை. இவற்றுக்கான தீர்வை, அரசாங்கம் விரைவில் வழங்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
‘அரசியல் தலையீட்டால் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம்’
“சட்டவிரோதமான எதையும் நாங்கள் செய்யவில்லை” என்கிறார், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஜோன் கெனடி. “வாழ்வதற்கான உரிமை எமக்குண்டு. இரணைதீவுக்கு, 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு இருக்கிறது. நாங்கள், மீன்பிடியைத் தொழிலாகக் கொண்ட சமூகம். இராணுவத்துடனோ அல்லது கடற்படையுடனோ, எமக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவர்கள் எமக்கு, முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். அரசியல் தலையீடொன்று இங்கு உள்ளதெனவும், அதனாலேயே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன எனவும் நாம் நம்புகிறோம். ஆயரின் இல்லத்துக்கு நாம் கடிதம் எழுதியுள்ளதோடு, பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்துக்கும் வேண்டுகோள்களை அனுப்பினோம். ஆனால், அவர்களிடமிருந்து பதிலேதும் கிடைக்கவில்லை” என, அவர் குறிப்பிட்டார்.
‘மீன்பிடிக்கும் போது கடற்படை உதவுகிறது’
“நாங்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது, கடற்படை எமக்கு உதவுகிறது” என, மீனவர் சங்கத்தின் உறுப்பினர்களுள் ஒருவரான அந்தனி நியூமான் தெரிவித்தார். “இரணைமாதா நகரிலிருந்து இரணைதீவுக்கு மீன்பிடிக்கச் சென்று வருவதற்கு, எமக்கு 20 லீற்றர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. மீனவர்கள் இரணைதீவிலேயே இருந்தால், ஒரு மாதத்துக்கு அவர்களுக்கு 5,000 ரூபாய் தான் எரிபொருளுக்காகத் தேவைப்படும். ஆனால் இப்போது, கிட்டத்தட்ட 30,000 ரூபாய் தேவைப்படுகிறது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் பதில்: ‘கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன’
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மற்றும் இந்துமத விவகாரங்கள் அமைச்சின் ஊடகச் செயலாளர் துமிந்த பண்டார, இப்பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, இராணுவத்துடன் கடந்தாண்டில், பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன எனக் குறிப்பிட்டார்.
“சட்டவிரோத இந்திய மீன்பிடியைக் கண்காணிப்பதற்காக, இப்பகுதியில் ரேடார் கட்டமைப்பொன்றை உருவாக்க, கடற்படை திட்டமிட்டுள்ளது. ஆகவே, அப்பகுதியில் இருப்பதற்கு, மக்களுக்கு அனுமதிக்கப்படாது. ஆனால், இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறும் போது, தம்மீது குறைகூறப்படாது என்றால், அத்திட்டத்தை இல்லாது செய்யத் தயாராக இருப்பதாக, கடற்படைத் தளபதி கூறுகிறார்.
“இராணுவம், இம்மக்களுக்கு ஏராளமான உதவிகளை ஏற்கெனவே வழங்கியுள்ளதுடன், வடக்கு முழுவதும் சுமார் 40,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இம்மக்களுக்கான மாற்றுத் தீர்வுகளைக் காண்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
“இப்பகுதி மக்கள், தங்களது சொந்த நிலங்களில் குடியேற விரும்புகின்றனர். ஆனால் போரின் போது, சில கொடுக்கல் – வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன. அவை தொடர்பில், அரசாங்கமும் அதிகாரிகளும், தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்” என, அவர் குறிப்பிட்டார்.
முயற்சியில் பயனில்லை
இக்காணிகளை விடுவிப்பதற்கான உத்தரவை, காணி ஆணையாளருக்கும் காணி அதிகாரிகளுக்கும், வடமாகாண முதலமைச்சரும் காணி அமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரனே வழங்க வேண்டுமெனவும், அவ்வுத்தரவு இதுவரை வழங்கப்படவில்லை எனவும், காணி ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்தன. இது தொடர்பில் அறிவதற்காக, காணி ஆணையாளரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், வெற்றியளிக்கவில்லை. அதேபோல், இவ்விடயம் தொடர்பாகவும் மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாகவும் முதலமைச்சரிடம் கேள்விகளை எழுப்புவதற்காக மேற்கொண்ட முயற்சிகளும் பயனளித்திருக்கவில்லை.
-tamilmirror.lk