தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் செய்ய வேண்டியது என்ன?

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு 14 அகதிகளை (கடந்த மே மாதம் 5ஆம் தேதி) ஏற்றிவந்த படகோட்டிகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பணத்திற்காக இவர்கள் அகதிகளை அழைத்துவந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக விசாரணைகளை நடத்திவரும் போலீஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இரண்டு கைக்குழந்தைகள், இரண்டு சிறுவர்கள், மூன்று பெண்கள் உள்ளிட்ட 14 இலங்கை அகதிகள் பாதுகாப்பற்ற படகு பயணத்தின் மூலம் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தனர். இலங்கைக் கடற்படையினர், இவர்களைக் கைதுசெய்து, காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாக்குமூலங்களைப் பதிவுசெய்த போலீசார் 14 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். நீதிமன்றம் இவர்களை விடுத்த பின்னர், குறித்த அகதிகள் தமது சொந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

முறையான வேலைத் திட்டம் இருக்கும் போது குழந்தைகளுடன் பாதுகாப்பற்ற இந்த கடல் பயணத்தை ஏன் இவர்கள் மேற்கொண்டனர் என்ற கேள்வி எழுந்தது.

இந்தியாவில் இருந்து நாடு திரும்ப விருப்பும் இலங்கை அகதிகளுக்கான வேலைத் திட்டம் என்ன என்பது குறித்து கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்திலுள்ள அதிகாரியொருவருடன் தொடர்புகொண்டுகேட்டோம்.

இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

”இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அவர்களின் சுயவிருப்பின் பெயரில் இலங்கை திரும்ப விரும்பினால் ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் ஊடாக நிகழ்ச்சித் திட்டம் ஒன்று இருக்கிறது. சென்னையில் உள்ள எமது அலுவலகத்தில் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அகதிகள் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்புவோருக்கு இந்த உதவிகள் கிடைக்கின்றன. அவர்கள் நாடு திரும்புவதற்கான விமானப் பயணச் சீட்டு, மீள்ஒருங்கிணைப்பிற்கான சிறு ஊக்கத்தொகை, போக்குவரத்து வசதி என்பவற்றை அகதிகள் பெற முடியும். போர் முடிந்த பின்னர் இதுவரை சுயவிருப்பத்தின் பேரில் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக 7,000 பேர் வரை நாடு திரும்பியுள்ளனர். ஆனால் இவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வருவது முக்கியமானது” என்று அந்த அதிகாரி கூறினார்.

இலங்கைக்கு படகில் வந்த அகதிகள் குறித்து மேலதிக விபரங்களைப் பெற இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை தொடர்கொண்டு பேசினோம்.

இலங்கை அகதிகள் சுயவிருப்பின் பேரில் நாடு திரும்புவதற்கு முறையான வேலைத் திட்டமொன்று இருக்கிறது எனவும், இப்படியிருக்க, இந்த அகதிகள் ஏன் இவ்வாறு பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொண்டனர் என்ற கேள்வி எழுவதாக இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் கூறினார். இருந்தாலும் இவர்கள் குறித்த சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறினார்.

”இந்தியாவில் இருந்து படகில் வந்தவர்கள் குறித்து இதுவரை சரியானமுறையில் தகவல்கள் கிடைக்கவில்லை. இவர்களை எவ்வாறு அகதிகள் எனக் கூறமுடியும் என்பது தெரியவில்லை. இவர்கள் அகதிகள் தான் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதன்பின்னர், அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பது குறித்து ஆராயலாம். இந்தியாவில் உள்ள அகதிகள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு முறையான வேலைத் திட்டமொன்று இருக்கிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசாங்கம், அமைச்சர் என்ற வகையில் நாம் செய்துகொடுக்கிறோம்.” என்று கூறி முடித்தார்.

இலங்கை திரும்பிய அகதிகள்

படகில் இலங்கைக்கு வந்த 14 பேரையும் விசாரித்த காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்புகொண்டு இதுகுறித்து பேசினோம்.

”இவர்கள் 14 பேரையும் கடற்படையினர் எம்மிடம் கையளித்தனர். இந்த அகதிகளை அழைத்துவந்த இரண்டு படகோட்டிகள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த இருவர் குறித்து தொடர்ந்து விசாரிக்கிறோம். இவர்களின் வங்கிக் கணக்குகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிட்ட தொகை பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. இதில் எமக்கு சந்தேகம் இருக்கிறது. பணத்திற்காக இந்த அகதிகளை குறித்த படகோட்டிகள் ஏற்றிவந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கிறோம்.” என்று கூறினார்.

முறையான, பாதுகாப்பான பயண முறைகள் இருக்கும் போது, இவ்வாறு பாதுகாப்பற்ற, சட்டவிரோதமான கடற்பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்பதை நாடு திரும்ப காத்திருப்போர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையின் உள்நாட்டு போரினால் சுமார் 300,000 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்குச் சென்றுள்ளனர். தமிழக மறுவாழ்வுத்துறை அலுவலகத்தின் புள்ளிவிபரத்தின்படி இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகள் தமிழகத்தின் பல்வேறு அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இலங்கையின் போர் முடிந்த பின்னர் இவர்கள் சிலர் சுயவிருப்பின் பேரில் மீண்டும் நாடு திரும்ப முன்வந்தனர். சுயவிருப்பில் இலங்கை திரும்ப விருப்பும் அகதிகளுக்காக உதவ ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயமும் பணியாற்றி வருகிறது. -BBC_Tamil

TAGS: