வடக்கில் விகாரைகள்; தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது! அமைச்சர் சஜித் பிரேமதாச

வடக்கில் விகாரைகள் அமைத்தாலும் சரி தெற்கில் இந்து கோவில்கள் அமைத்தாலும் சரி அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று வீடமைப்பு நிர்மாண அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வவுனியா புளியங்குளம் பகுதியில் உள்ள பாரதி கோட்டம் மாதிரி வீட்டுத்திட்டத்தை இன்று(19-05-2018) திறந்து வைத்து விட்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்………….

பாரதியாரின் பெயரிலேயே இருக்கும் இந்த கிராமத்தின் நிகழ்வில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கின்றது.

என்னுடைய அமைச்சு ஒரு வித்தியாசமானது எடுத்த காரியத்தை மிகவும் வேகமாக செய்வதில் எனது அமைச்சில் வேலை செய்பவர்கள் மிகவும் அர்பணிப்பானவர்கள்.

எதிர்வரும் வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்பாக நாடளாவிய ரீதியில் 2500 மாதிரி கிராமங்களுக்கான அடிக்கல்களை நாங்கள் நாட்டி விடுவோம் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

நாம் வீடுகளை மாத்திரம் வழங்கவில்லை குடிநீர் மின்சாரம் வீதி போன்ற உட்கட்டுமான வசதிகள் என்பவற்றயும் சேர்த்தே வழங்குகிறோம்.

போரினால் பாதிக்கப்பட்ட இந்த பிரதேச மக்கள் தமது உடமைகளையும் உறைவிடங்களையும் இழந்து நிர்கதியாகி அநாதரவாக காணப்பட்டார்கள் ஆனால் தற்போது நாட்டில் காணப்படும் சமாதான சூழ்நிலையிலே கூட்டிணைந்த அரசாங்கத்தினூடாக அரசதலைவரின் செயற்திட்டத்தின் கீழ் பிரதமரின் வழிகாட்டலில் உங்களுடைய காலடிக்கு வீடுகளை கொண்டுவந்து தருவோம் என்பதை இந்த சந்தர்ப்பத்திலே கூறிக்கொள்கிறேன்.

அரசியல் என்று பார்க்கும் போது பல பிரிவுகள் காணப்படுகிறது. அதிலே மக்களிற்கு பல வசதிகளையும் வேலைத்திட்டங்களை செய்பவர்கள் ஒரு விதம் மறுபுறம் எதுவுமே செய்யாமல் சோம்பேறி தனமாக வீட்டிலே நித்திரை கொண்டு அரசியல் நடத்துபவர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் தான் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குலங்களுக்கிடையிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விட்டு அதனை பார்த்து சந்தோசமடைகிறார்கள் .

அத்துடன் மக்கள் மத்தியில் பிரபலம் அடைபவர்களாகவும் அவர்கள் தான் காணப்படுகிறார்கள்.

பொய்பரப்புகளை முன்வைத்து மக்களை ஏமாற்றுபவர்களின் வார்த்தைகளை நம்பி விடாதீர்கள்.அரசியலில் சரியான வேலைத்திட்டத்தை யார் ஏற்படுத்துகிறார்களோ உங்களின் கண்ணெதிரே உள்ள துக்கத்தை யார் துடைக்கிறார்களோஇஅவர்களை மட்டுமே நீங்கள் தெரிவுசெய்து கொள்ளவேண்டும்.

சிலர் சிந்திக்கிறார்கள் வடக்கில் விகாரைகள் அமைக்க கூடாது தெற்கிலே இந்து ஆலயங்கள் அமைக்கப்பட கூடாது என்று இப்படியானவர்கள் எங்களுக்கிடையில் இன மத வேறுபாட்டை உருவாக்குதன் மூலம் அவர்கள் சுகபோகங்களை அனுபவிக்கிறார்கள்.

வடக்கில் விகாரைகள் அமைத்தாலும் சரி தெற்கில் இந்து கோவில்கள் அமைத்தாலும் சரி அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்பதை கூறிக்கொள்கிறேன்.

நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் ஒற்றுமையான சகோதரத்துவம் மிக்க இந்த பூமியிலே சக்திமிக்கவர்களாக மாறவேண்டும் இதுவே இலங்கை நாட்டினுடைய பலம். அதன் மூலமே நாம் புதிய அபிவிருத்தி பாதையை நோக்கி நகர முடியும். எனவே பொய் கூறி அரசியல் நடத்துபவர்களை நீங்கள் இனம்காணவேண்டும்.

அத்துடன் யதார்த்த ரீதியான செயற்பாடுகளை செய்வதோடு நாட்டை பாதுகாக்க வேண்டும் அதனை முன்னேற்ற வேண்டும் என்பதே எனது எண்ணமாகவுள்ளது.

வடக்கு மக்களின் எதிர்பார்ப்பு என்னவென்று நான் அறியவேண்டும். எனது வாழ்நாள் முழுவதும் அர்பணிப்பான சேவையை என்னுடைய அமைச்சினுடாக உங்களிற்கு வழங்குவேன் என்று இந்த இடத்திலே உறுதி கூறுகிறேன்.

எனக்கு கிடைக்கும் சுகபோகங்கள் அனைத்தும் உங்களிற்காக அர்ப்பணித்து அனைவருக்கும் வீடுதிட்டத்தை அமைத்து கொடுப்பேன் என்று வாக்குறுதி வழங்குகிறேன்.

அத்துடன் 2025 ம் ஆண்டளவிலே நீங்கள் அனைவரும் வீடுகளை பெற்று வாழும் சூழலை நான் ஏற்படுத்தி கொடுப்பேன் என்றும் கூறினார்.

-athirvu.in

TAGS: