சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சண்டையில் கூட்டுப்படையினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து கடைசி நகரையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், சிரியாவின் படியா பகுதியில் சென்ற படைவீரர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கார் குண்டு வெடிப்பு மூலம் தாக்குதல் நடத்தினர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் படைவீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் சிரியாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
-athirvu.in