தமிழ் சமூகம் இருந்தமைக்கான அடையாளம் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது!

கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தனித்துவமான சிந்தனை இல்லாமையினால் தமிழ் சமூகம் இருந்தமைக்கான அடையாளம் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாதிய பயிற்சியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தாா்.

அவா் தொடா்ந்தும் உரையாற்றுகையில்…….

கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தனித்துவமான சிந்தனை இல்லாத காரணத்தினால் கிழக்கில் தமிழ் சமூகம் இருந்ததற்கான அடையாளமே அடுத்தடுத்த தலைமுறையில் இல்லாமல்போகும் நிலையுள்ளது.

இளைஞர்கள் விளையாட்டுடன் மட்டும் நின்றுவிடாது நீங்கள் சார்ந்த சமூகத்தில் நீங்கள் சார்ந்த சமூகத்தில் முற்போக்கு சிந்தனையுடையவர்களாக செயற்படவேண்டும்.

கடந்தவாரம் மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்த எட்டு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் பல்வேறு போதைப்பொருட்கள் பாவனைக்கு வருவதனால் இளைஞர்கள் ஆரோக்கியமற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இன்று அனேகமான இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தமது காலத்தினை நேரத்தினை செலவிடுகின்றனர்.

மனிதன் மனிதனோடு பேசும் நிலமை மாறி மனிதன் இயந்திரங்களோடு பேசி இயந்திரங்களாகவே மாறும் நிலை உருவாகிவருகின்றது.இந்த நிலமை மாற்றப்படவேண்டும்.

முற்போக்கு சிந்தனையுடைய தலைவர்கள் உருவாகவேண்டும்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்.அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

வடகிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினை வழங்குவதற்கான எந்த திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பழம்பெரும் தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன.அதனை திறப்பதற்கான எந்த வழிவகைகளும் செய்யப்படவில்லை.

இந்த ஆட்சிக்காலத்தில் இதுவரையில் ஒரேயொரு தொழிற்சாலையே மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதுதான் சாராய தொழிற்சாலை.அதனை நாங்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து நிறுத்திவைத்துள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களில் 40வீதமானவர்கள் மதுபானம் வழங்கியே வெற்றிபெற்றனர்.

கிராமங்களில் மதுபானம் கொடுப்பதற்கு வசதிவாய்ப்பினைக்கொண்டவர் அந்த வட்டாரத்தில்வெற்றிபெற்றுவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடும் இளைஞர்கள் வேறு எதற்கும் முன்னிற்கமாட்டார்கள்.

அண்மையில் மட்டக்களப்பு நகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றபோது அதில் இளைஞர்கள் பங்குபற்றவில்லை.முகப்புத்தகத்தில் படம் போடுவதற்கும் எழுதுவதற்கும் ஆயிரம்பேர் வருவார்கள்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவேண்டியது.ஒரு அழிக்கப்பட்ட சமூகம்,ஒழிக்கப்பட்ட சமூகம்,காணாமல்ஆக்கப்பட்டவர்களின் சமூகம் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்துகின்றனர்.

அதற்கான எமது உணர்வினை வெளிப்படுத்தமுடியாத நிலையிலேயே உள்ளனர்.இன்றைய நிலமை சிலரது தியாகத்தினால் வந்தது.கடந்த கால ஆட்சியை மாற்றியது.இன்று அடையாள அட்டை இல்லாமல் கொழும்புசென்றுவரும் சூழ்நிலையுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் அவ்வாறு செல்லமுடியாது.எனது மாணவர்களில் பலர் கொழும்புக்கு கடவுச்சீட்டு எடுக்கச்சென்று காணாமல்போன நிலமையும் இருந்தது.ஆனால் இன்று அந்த சூழ்நிலை மாற்றப்பட்டுள்ளது.

சிலருக்கு இன்று அடையாள அட்டை கூட இல்லை.இன்றும் எதுவும் பேசமுடியும்.ஒரு ஜனநாயக நிலை உருவாகியுள்ளது.எனினும் இந்த நிலமை இன்னும் அதிகரிக்கப்படவேண்டும்.

அலரி மாளிகைக்குள் செல்லமுடியும்.ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்று பார்வையிடமுடியும்.ஒரு சுதந்திரமான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்தகாலத்தில் இவ்வாறான சூழ்நிலையிருக்கவில்லை.வெளியில் வெள்ளைவான் எந்த நேரமும் நின்றுகொண்டிருக்கும்.எத்தனையோபேர் கடத்தப்பட்டார்கள்,கொல்லப்பட்டார்கள்.அந்த சூழல் இன்று மாற்றப்பட்டுள்ளது.

இந்த சூழலை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.நன்கு சிந்திக்ககூடிய,அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டக்கூடிய நல்ல இளைஞர்கள் உருவாகவேண்டும்.முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் என்ற அடிப்படையில் ஓரணியில் திரளவேண்டும்.

கிழக்கின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி இன்று எழுப்பப்படுகின்றது.தனது இனத்தினையும் தனது மக்களையும் சிந்திக்கின்ற ஒவ்வொரு இளைஞனும்தான் கிழக்கின் அடுத்த தலைவர்கள்.

இன்று இஸ்லாமிய சமூகம் தனித்துவமாக சிந்திக்கின்றது.அந்த தனித்துவங்கள் எங்களுக்கு வரவில்லை.இன்று எந்த முஸ்லிம் பகுதியிலும் மதுபானசாலையில்லை. ஒரு புத்தா் சிலையினை வைக்கமுடியாது.

கிழக்கில் தமிழ் சமூகம் இருந்ததற்கான அடையாளமே அடுத்தடுத்த தலைமுறையில் இல்லாமல்போகும் நிலையும் உருவாகலாம்.

ஆரோக்கியமான சிந்தனைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய தனது அடுத்த தலைமுறை தொடர்பில் சிந்திக்ககூடிய,தனது இருப்பு தொடர்பில் சிந்திக்ககூடிய நல்ல இளைஞர்கள் உருவாகவேண்டும்.

தமிழ் இளைஞர்கள் அரசாங்கத்தில் மட்டும் வேலைசெய்யவேண்டும் என்ற சிந்தனையினை மாற்றவேண்டும்.எமது தமிழ் சமூகம் முன்னேற்றமடையாததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.தனியார் நிறுவனங்களில் தொழில் செய்யவும் விரும்பமில்லை,சுயதொழில் செய்யவும் விரும்பம் இல்லை.

அரச தொழிலையே தமிழ் இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறான நிலை தொடர்ந்து நீடிக்குமானால் எமது சமூகமும் முன்னெற்றமடையாது,இந்த நாடும் முன்னெற்றமடையாது.

இந்த நிகழ்வில் மாணவர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள்,பெற்றோர் என பெருமளாவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: