ஒற்றுமை ஓங்கியதால் ‘ஒப்பாரி ஓலம்’

உலக வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், பல நாடுகள் தங்களது சுதந்திரத்தைப் பல தியாகங்கள், இழப்புகளுக்கு மத்தியிலேயே பெற்றுள்ன. அதிர்ஷ்டவசமாக இலங்கை அஹிம்ஷை வழியில் தனது சுதந்திரத்தைப் பெற்றது. ஆனாலும், துரதிர்ஷ்டமாக பல்லின மக்கள் வாழும் நாட்டில், பன்முகக் கலாசாரத் தன்மை பறிபோய்விட்டது.

நாட்டின் ஓரினம், பிறிதோர் இனத்தைப் பல வழிகளிலும் அடக்கி ஒடுக்கி, கடை நிலைக்குக் கொண்டு சென்றது. இன உரிமைப் போருக்கு, உலகிலுள்ள எல்லா அரசாங்கங்கள் போலவே, பயங்கரவாதம் என்று பெயர்சூட்டப்பட்டது. போர் தொடுத்தது; வெற்றி கண்டது. ஈற்றில், மிகப்பெரிய மனித அவலங்களுடன் முள்ளிவாய்க்காலில் மௌனம் கண்டது.

இந்நிலையில், மஹிந்த தலைமையிலான முன்னைய ஆட்சியாளர்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முற்றிலும் அனுமதி வழங்கவில்லை. ஆனால், தற்போதைய மைத்திரி – ரணில் நல்லாட்சி கூட, வெள்ளை மனம் கொண்டு அனுமதிக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், மனச்சாட்சிக்கு நேர்மையான காரியமாகவும் ஒருவகையில் கவலைகளைக் கரைக்கும் நிகழ்வொன்றாகவுமே பார்க்கப்படுகிறது.

இவ்வாறாகத் தமிழ் மக்கள் தமது கவலைகளைக் களையும் அதேநேரம், சிங்களத் தலைவர்களும் தமது தவறுகளை உணர்ந்து, அவற்றைக் களைந்து, வரப்போகும் சந்ததிக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்; அதற்கு வழிவகுக்க வேண்டும்.

ஆனால், சிங்கள மக்களைத் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிரான ஒருவிதமான கொதி நிலையில் பேணுவதற்கும், அதனூடாக அசலாக அரசியல் நடாத்துவதற்கும், வலுவான ஆயுதம் பயங்கரவாதம், பிரிவனைவாதம் ஆகியனவாகும்.

ஆகவே, தெற்கு அரசியல்வாதிகள், மீண்டும் முள்ளிவாய்க்காலைப் பயன்படுத்தி, அரசியல் செய்யத் தொடங்கி விட்டார்கள். தமிழ் மக்களின் ஆழ்மனதில் அடியோடு அகற்றப்பட்ட ஆயுதப் போர், மீண்டும் ஏற்படப் போவதாகப் பயமுறுத்தப்படுகிறது.  அல்லது உசுப்பேற்றப்படுகிறது. புலிகள் மீண்டும் பிறப்பதாகப் புதுக்கதை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் யுத்தத்தில் தமிழ் மக்கள் உயிர் துறந்த தம் உறவுகளை நினைவு கூருவதைக் கூட, புலிகளை நினைவு கூருவதுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. மொத்தத்தில் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடப்படுகிறது.

தங்களால் கிள்ளி எறியப்பட்டு, கொள்ளி வைக்கப்பட்ட ‘முள்ளிவாய்க்கால்’, தமிழ் மக்களுக்கு நீதியையும் நியாயத்தையும் அள்ளிக் கொடுத்து விடுமோ என அச்சம் அடைந்து, ஆதங்கப்படுவது புலப்படுகிறது.

இவை எல்லாம் ஏனென்றால், உள்ளுக்குள் எவ்வளவுதான் பொருமல்கள் இருந்தாலும், பொதுவில், தமிழ் மக்கள் ஒற்றுமையாக, ஒருமித்து, ஒன்று கூடி அஞ்சலி செய்தது, கொழும்புக்கு வருத்தமாக இருக்கின்றது.
சுதந்திர விடுதலை கோரிப் போராடும் இனத்துக்கிடையில் காணப்படுகின்ற சிறு வேறுபாடுகளைக் கண்டுபிடித்தல், அவற்றைப் பூதாகாரப்படுத்தல், ஊதிப் பெருப்பித்தல், அதைக் கொண்டு அவ்வினத்தைப் பல துண்டுகளாக உடைத்தல், அவர்கள் மீள ஒருங்கிணையாதவாறு கண்காணித்தல், அவ்வாறு இணைய முற்படின் இணைவைத் தடுத்தல் என்பவை ஆக்கிரமிப்பு, அடக்குமுறை மனப்பான்மை கொண்ட அரசுகளின் பொதுவான இராஜதந்திரக் காய் நகர்த்தல்கள் ஆகும்.

இந்தக் காய்நகர்த்தல்களில் தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் பல தடவைகள் பலியாகி உள்ளன. இதற்காகக் கொடுத்த விலைகள் மிகவும் பெரியவை; இது வரலாறு.

இந்நிலையில், கடந்த காலங்களைக் காட்டிலும், இம்முறை முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களது உணர்வுகளை, உலகின் முன் கொண்டு சென்றுள்ளது. அதற்கும் அப்பால், தாயகத்தில் சிதறிக்கிடந்த உள்ளங்களை, ‘ஒரு தாய் மடி’ என அரவணைத்துள்ளது.

இது இவ்வாறு நிற்க, ஆண்டாண்டு காலத் திட்டமிட்ட குடியேற்றங்களால் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களது வலு வற்றி வருகின்றது. வடக்கிலும் அவ்வாறான நிலையை விரைவில் ஏற்படுத்தத் திரைமறைவில் பல வடிவங்களில் காரியங்கள் ஒப்பேறுகின்றன.

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் வேகமான சிங்களக் குடியேற்றங்கள், விவேகமாக நடாத்தப்பட்டு  வருகின்றது. இந்த மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில், சிங்கள உறுப்பினர் ஒருவரை, அடுத்தபொதுத்தேர்தலில், நாடாளுமன்றத்துக்கு அனுப்பக் கூடிய வல்லமை எட்டப்பட்டுவிடும்.

“நாட்டில் இனப்பிரச்சினையே இல்லை” என்பர் சிங்கள அரசியல்வாதிகள். சரி அவ்வாறு இருப்பினும், அதை வடக்குடன் மட்டுப்படுத்தவே ஆவல் கொண்டுள்ளனர்.

கிழக்கில் மூவின மக்களும் ஒற்றுமையாகப் பிரச்சினைகள் இன்றி, ஒரு தாய் மக்களாக இருப்பதாகவே கூறிக் கொள்கின்றனர். அல்லது அவ்வாறு காண்பிக்க விரும்புகின்றனர்.

ஆனால், தொடர்ந்து ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களின் நன்கு திட்டமிட்ட, எழு தசாப்த காலத்துக்கும் மேல் நீடிக்கும் குடியேற்றங்களாலேயே மூவின மக்கள் என்ற வார்த்தைப் பிரயோகமே கிழக்கில் ஏற்பட்டது.

உண்மையில் ஒரு மொழி (தமிழ் மொழி) பேசும், இரண்டு இனங்கள் மட்டுமே கிழக்குக்கு உரித்துக்காரர். அதற்குள்ளும் இனம், மதம் கடந்து, தாய் மொழி என்ற தமிழ் மொழியால் ஒன்றுபட்டவர்களையும், பிரிக்கப் பல ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.   திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு, மாவட்டச் செயலாளராக தமிழ் பேசும் சமூகத்திலிருந்து ஒருவர் வருவது, உலக அதிசயமாகி விட்டது.

இவ்வாறாகக் கிழக்கை முழுமையாகப் பேரினவாதம் விழுங்கும் அபாயகரமான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. தங்களது இருப்பு, தங்கள் மண்ணில் இல்லாமல் செய்யப்படுகின்றது என, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் பெரும் உள்ளக் குமுறல்களுடன் வாழ்கின்றனர்.

முள்ளிவாய்க்காலில் கொடிய போர் முடிந்தாலும், அதற்கு முடிச்சுப் போட்டது, மாவிலாற்றில் ஆகும். அந்த நான்காம் கட்ட ஈழப்போரே, மாவிலாறு, சம்பூர், கட்டைபறிச்சான், வாகரை, கதிரவெளி என முள்ளிவாய்க்கால் வரை, வகை தொகையின்றிய அழிவுகளுடன் பயணித்தது.

இந்நிலையில், மூன்றாம் கட்ட யுத்தம் என வகைப்படுத்தப்பட்ட புலிகளுக்கும் சந்திரிகா அரசாங்கத்துக்கும் இடையிலான போர், 1995ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் திருகோணமலைத் துறைமுகத்தில், ‘ரணசுறு’, ‘சூரயா’ ஆகிய கடற்படையின் போர்க்கப்பல்களைத் தகர்த்தே ஆரம்பித்தது.

இரண்டாம் கட்ட ஈழப்போர் என வகைப்படுத்தப்பட்ட, புலிகளுக்கும் பிரேமதாச அரசாங்கத்துக்கும் இடையிலான யுத்தம், 1990ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில் மட்டக்களப்பிலேயே ஆரம்பித்தது.

ஆனால், இலங்கையின் இனப்பிரச்சினை என்றவுடன், உலகத்தின் பார்வை வடக்கு நோக்கியே செல்கின்றது. அவ்வப்போது தாயகம் வரும் இராஜதந்திரிகளும் அங்கேயே கூடுதலாகச் செல்கின்றனர். தமிழ் மக்களின் தாயகம் என்பது, வடக்கு, கிழக்கு என்பதாகும்.

இந்நிலையில், கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள அரசியல் தலைவர்கள், தங்கள் தங்கள் மாவட்டங்களில் மே 18 நிகழ்வைக் கடைப்பிடித்துள்ளார்கள். மூன்று மாவட்டங்களிலும் தனித்தனியாக நடைபெற்ற ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை’ ஒரு பொது இடத்துக்குக் கொண்டு சென்றிருக்கலாம்.

அங்குள்ள அரசியல்வாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் என அனைவரும் ஒரு பொதுவான இடத்தில் ஒன்று கூடி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்தியிருக்கலாம். இதன் ஊடாக, ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிக்கான அடித்தளத்தை இட்டிருக்கலாம்.

குமாரபுரம் படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, கஞ்சிகுடிச்சாறு படுகொலை என கிழக்கின் அனைத்து மாவட்டங்களும் பல படுகொலைகளைக் கண்டுள்ளன.

இந்நிலையில் கிழக்கில் சூரியன் உதிப்பது போல, உலகத்தின் ஒட்டு மொத்தப் பார்வையையும் மீண்டும் கிழக்கு மீது திரும்பவும் ஏற்பட்ட, ஒரு வாய்ப்பு, பொது நினைவேந்தல் ஆகும்.

எதிர்வரும் காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, ஒரு பொதுவான அமைப்பின் ஊடாக நடத்துவதையே அனைவரும் விரும்புகின்றனர். சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்துப் பகுதியினரும் இணைந்து,  வடக்கு, கிழக்கின் எட்டு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய வகையில் அந்த அமைப்பு வலுவாக அமைய வேண்டும்.
இவ்வாறான சூழ்நிலையில், மே 18, மே 19 ஆகிய தினங்களில் இலங்கைத்தீவின் இரு முனைகளில் ஈரினங்கள் இரண்டு வேறுபட்ட நிகழ்வுகளை நடாத்தியுள்ளன.

முதலாவது தமிழின அழிப்பு நாள், படையினர் போர்க்குற்றவாளிகள் என்றவாறாக வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலும் இரண்டாவது, இலங்கையின் வெற்றி நாள், படையினர் போர்வீரர்கள் என்றவாறாக நாட்டின் ஐனாதிபதி தலைமையிலும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

“சர்வதேசம் தனது மனச்சாட்சிக் கண்களைத் திறக்கும். தமிழ் இனப்படுகொலைக்கு நிச்சயம் ஒரு நாள் நீதி கிடைக்கும்” என அங்கு முதலமைச்சர் உரையாற்றியிருந்தார்.

முதலமைச்சரின் நம்பிக்கை ஈடேற வேண்டும். வரலாற்றில் ஒருபோதும், தர்மம் நிரந்தரமாகத் தோற்றதில்லை.

(காரை துர்க்கா)

-tamilmirror.lk

TAGS: