ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கின்ற அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் கடந்த காலங்களில் பலராலும் வலியுறுத்தப்பட்டும் அரச தலைவருக்கும் உரியவர்களுக்கும் அழுத்தங்கள் பிறப்பிக்கப்பட்டும் வந்தது.
2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும், ஆனந்தசுதாகருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்திருக்கிறது.
இரண்டு குழந்தைகளுடன் தனது கணவனின் விடுதலைக்காக போராடி வந்த, அவரது மனைவி யோகராணி கடந்த மார்ச் மாதம் நோயுற்ற நிலையில் மரணமானார்.கிளிநொச்சி மருதநகரில் நடைபெற்ற மனைவியின் இறுதி நிகழ்வில் பங்கேற்க 3 மணிநேரம் அனுமதிக்கப்பட்டார் ஆனந்தசுதாகர்.
பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட அவர் மனைவியின் உடலுக்கு இறுதிவணக்கம் செலுத்தியதுடன், தனது பிள்ளைகள் இருவருடனும், துயரைப் பகிர்ந்து கொண்டார்.
இறுதி நிகழ்வுக்குப் பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் அவரை பேருந்தில் ஏற்றும் போது, ஆனந்தசுதாகரின் மகளும் அந்த வாகனத்தில் ஏறிய காட்சி அங்கிருந்தவர்களை மாத்திரமன்றி, அதுபற்றிய படங்களை ஊடகங்களில் பார்த்த உலகெங்கும் உள்ள தமிழர்களையும் கலங்க வைத்துள்ளது.
தாயை இழந்து விட்ட நிலையிலும், தந்தை இருந்தும் அவரது அரவணைப்பில் வாழ முடியாத நிலையிலும் இரு பிஞ்சுகள் பரிதவித்து நின்றன.
இந்நிலையில், குறித்த பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யுமாறு தாயக பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள், பொது அமைப்புக்கள் என்பன இணைந்து கையெழுத்துப்பேராட்டம் போன்றவற்றை மேற்கொண்டனர்.
ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் இருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உருக்கமான பல கடிதங்களை எழுதியிருந்தனர்.
எனினும் அரசியல் கைதி ஆனந்தசுதாகரன் விடுவிக்கப்படாத நிலையில் கடந்த வெசாக் பூரணை தினத்தில் ஆனந்தசுதாகரனை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு அனைத்துத் தரப்பினராலும் அழுத்தங்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் இதுவரையில் ஆனந்தசுதாகரன் விடுதலை செய்யப்படவுமில்லை அவர்களது பிள்ளைகளின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படவுமில்லை.
தனது தந்தையுடன் சேர்ந்து வாழப்போகின்ற நாள் எப்போது என பல்வேறு ஏக்கங்களுக்கு மத்தியில் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இருவரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், குறித்த பிள்ளைகளின் கோரிக்கைக்கு இதுவரையில் எவ்வித தீர்வுகளும் வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரியது என்பதுடன் ஆனந்தசுதாகரனையும் அவரது பிள்ளைகளையும் எம்மில் அதிகமானவர்கள் மறந்து விட்டனர்.
இதற்கு முன்னர் குறித்த பிள்ளைகளுக்கு பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களும் குறித்த பிள்ளைகளுக்கான உதவியை வழங்கி வைத்திருந்தார்.
அத்துடன், காரைநகர் வியாவில் ஐயனார் தேவஸ்தானம் அமைப்பினர் குறித்த பிள்ளைகளுக்கு நேற்றைய தினம் 50,000 ரூபா பண உதவியினை வழங்கி வைத்துள்ளனர்.
எது எவ்வாறாயினும், குறித்த பிள்ளைகளின் தற்போதைய பெரும் தேவை தமது தந்தையுடன் சேர்ந்து வாழ்வதே, எனவே அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலைக்கான தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-tamilcnn.lk