தமிழ் மக்கள் ரணிலிடம் கொடுத்த கோரிக்கை கடிதங்கள் குப்பையில்!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொது அமைப்புகள், பொது மக்களால் வழங்கப்பட்ட கோரிக்கை கடிதங்கள் மற்றும் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் என்பன யாழ்.நகர யூ எஸ் ஹோட்டலின் குப்பைத் தொட்டிக்குள் சென்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அன்றைய தினம் தனது கட்சி முக்கியஸ்தர்கள் உட்பட சில தரப்புக்களைச் சந்தித்திருந்தார். நல்லூரில் அமைந்துள்ள றியோவுக்குச் சென்ற பிரதமர், அதிகாரிகளுடன் இணைந்து ஐஸ்கிறீம் சுவைத்தார்.

மறுநாள் கிளிநொச்சிக்கு சென்ற அவர், அந்த மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் பங்கேற்றார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உட்பட பலர், தமது பிரச்சினைகளை முன்நிறுத்தி பிரதமரிடம் கோரிக்கை மனுக்களைக் கையளிக்க காத்திருந்தனர். எனினும் பிரதமரைச் சந்திக்க அவரது அதிகாரிகள் அனுமதியளிக்காததால், மக்கள் தமது மனுக்களை வீதியில் எறிந்துவிட்டு ஏமாற்றத்திடன் திரும்பினர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய பிரதமர், யாழ். மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து ஹோட்டல் ஒன்றில் மதிய போசன விருந்தளித்தார்.

அதனைத் தொடர்ந்து யாழ்.மாவட்ட காணி விடுப்புகள் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். அதன்பின்னர் யாழ்.மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் பங்கேற்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கான உத்தியோகபூர்வ கூட்டங்கள் நிறைவடைந்ததும் அவரது அதிகாரிகளின் அழைப்பில் யாழ்.நகரில் அமைந்துள்ள மற்றொரு ஹோட்டலில் இரவு விருந்துபசாரத்தில் பங்கேற்றார். இந்த இரவு விருந்துபசாரம் ஆட்டங்கள், பாட்டுகள் என களைகட்டியது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பொது அமைப்புக்கள் – பொது மக்கள் சார்பில் பல கோரிக்கை மனுக்கள் பிரதமருக்கு கையளிக்கப்பட்டன. அத்துடன் அரசியல் கட்சிகள், அதிகாரிகளும் சில முன்மொழிவுகளை பிரதமரிடம் முன்வைத்திருந்தன.

அவற்றை பிரதமரின் ஊடக இணைப்பாளர் சமன் என்பவரே சேகரித்து வைத்திருந்தார். அவர் அவற்றை இரவு விருந்துபசாரத்தில் தவறவிட்டுவிட்டார் அல்லது அக்கறையின்றி கைவிட்டுவிட்டார்.

இந்த நிலையில் அந்த மனுக்கள் – முன்மொழிவுகள் அனைத்தும் ஹோட்டல் குப்பைத் தொட்டிக்குள்ளேயே மறுநாள் காலையில் சென்றன என்று ஹோட்டலின் ஊழியர் தெரிவித்ததாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

-athirvu.in

TAGS: