பிரபாகரனுக்கு இருந்த பெருந்தன்மை எந்தவொரு அரசியல் தலைமைகளுக்கும் கிடையாது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இருந்த பெருந்தன்மை எந்தவொரு தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இன்றைக்கும் கிடையாது என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினமும் நினைவு பேருரையும் தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது, இந் நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது..

விநாயகமூர்த்தியும் நானும் நீண்ட காலமாக ஒன்றாக இணைந்து பயணித்திருக்கின்றோம். அவருக்கும் எனக்கும் இடையில் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. அதில் எங்களுக்குள் இடம்பெற்ற ஒரு சம்பவம் குறித்து நான் இந்த இடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

அதாவது இலங்கை படைகள் கடந்த 1990 ஆம் ஆண்டு இருந்ததைப் போன்று மீண்டும் முகாம்களுக்கு செல்ல வேண்டுமென அரசாங்கத்தை கோருவதற்கு தமிழ் தரப்புக்கள் தீர்மானிக்கின்றன. இதனை அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எனக்கு அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்த போது என் மனதில் வஞ்சகம் ஏதுமில்லாமல் அவ்வாறு நாம் கோரினால் அரச தரப்பினர் ஆனையிறவை தம்மிடமே மீள தர வேண்டுமெனக் கேட்கலாம் என்று நான் கூறியிருந்தேன். அப்போது எனக்கருகில் இரா.சம்மந்தனும் ,விநாயகமூர்த்தியுமே இருந்தனர்.

அவ்வாறு நான் கூறிய கருத்து கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்காணம் என சுழன்று வந்து திரிவுபடுத்தப்பட்டு ஆணந்த சங்கரி ஆணையிறவை அரச படைகளிடம் புலிகள் ஒப்படைக்க வேண்டுமெனக் கோருவதாக செய்திகள் பரவியிருந்தது.

ஆனால் அந்தக் கருத்தை நான் சொல்லவில்லை என்பதுடன் அப்போதைய அரச தரப்பினர்களிடம் ஆணையிறவை நீங்கள் இனி புலிகளிடமிருந்து பிடிப்பதென்பது பகல்க்கனவு என்றும் அதனை எந்தக் காலத்திலும. நீங்கள் பிடிக்க முடியாதென்றுமே குறிப்பிட்டிருந்தேன். அத்தோடு இனத்திற்காகவும் மண்ணுக்காகவும் எத்தனையோ இழப்புக்களையும், தியாகங்களையும் புலிகள் செய்திருந்ததையும் குறிப்பிட்டிருந்தேன்.

இவ்வாறான கருத்துக்களை தெரிவித்த நான் ஆணையிறவை கொடுக்க சொல்லி கேட்டிருப்பனா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். இருந்தும் நான் ஆணையிறவை கொடுக்க வேண்டுமெனக் கோரியதான செய்திகள் பரவி என்மீதான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் தன்னாலேயே இவ்வாறானதொரு நிலைமை வந்துவிட்டதாக கருதிய விநாயகமூர்த்தி என்னிடம் பேசுவதற்கு பலதடவைகள் முயற்சித்து ஒருக்கா என்னிடம் பேசியும் இருந்தார். அதன் போதுதான் இவ்வாறு எந்தக் கருத்தையும் எவருக்கும் சொல்லவில்லை என்று என்னிடம் கூறிய போது அதனை நானும் ஏற்றுக் கொண்டு அதனை நீங்கள் கூறவில்லை என்றும் எவ்வாறு அது திரிவுபடுத்தப்பட்டது என்று எனக்குத் தெரியும் என்றும் நான் விநாயகமூர்த்தியிடம் கூறியிருந்தேன்.

இவ்வாறானதொரு நிலையில் தம்பி பிரபாகரனுக்கும் இந்த விடயம் தெரிய வந்த போதும் அவரும் இதனை இலகுவில் நம்பவில்லை. அவ்வாறு அவர் எந்த சம்பவம் என்றாலும் அதனை ஆராய்ந்தே முடிவுகளை எடுக்கின்ற பண்பு அவரிடம் இருந்தது. அவ்வாறு அவருக்கு இருக்கின்ற பண்புகளோ, பெருந்தன்மைகளோ இன்றிருக்க கூடிய எந்தவொரு அரசியல் தலைமைகளுக்கும் கிடையாது. ஆனாலும் அன்று முதல் மலை உச்சியிலிருந்து உருட்டி விடப்பட்ட நான் இன்றுவரைக்கும் எழுந்திருக்கவே இல்லை.

அதற்கு விநாயகமூர்த்தி தான் காரணமென பலரும் நினைத்தனர். ஆனால் உண்மையில் அவர் காரணமல்ல. எவர் அதனை இவ்வாறு சொன்னவர் யார் என்று எனக்கு தெரியும். அதன் விளைவு தான் இன்று நடக்கிறது என்றார். இதேவேளை தமிழ் கட்சிகள் பலவும் இன்றைக்கு தேசியம் பேசுகின்றன. அதில் தேசியம் பேசுகின்ற அல்லது அந்த கொள்கையுடன் பயணிக்கின்ற கட்சிகள் எவை என்பதையும் பார்க்க வேண்டும். இன்றைக்கு கூட்டமைப்பில் இருக்கின்ற ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் அரசுடன் இருந்த அரச கட்சிகளாகவே பார்க்கப்பட்டன. அவர்களுடன் இன்று பலரும் தேசியம் பேசுகின்றவர்களாக இருக்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக தற்போதும் தேசியம் பேசுகின்ற கூட்டமைப்பினர் ஈபிடிபியுடனேயே ஒன்றாக சேர்ர்ந்து செயற்படும் நிலைக்கு வந்துள்ளீர்கள். ஆக இப்ப என்றாலும் உங்களுக்கு கொஞ்சமாவது தேசியம் இருக்கிறதா என்று எண்ண வேண்டும்.

ஈ.பீ.டி.பியுடனே சேர்ந்து செயற்படும் கூட்டமைப்பினரின் தேசியம் என்ற கொள்கை, கெளரவம் எல்லாம் எங்கே சென்று விட்டது. தமிழ்த் தேசியத்திற்காக உயிரிழந்த பொன்னம்பலம், சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் கட்டிக்காத்து வளர்த்த கெளரவம் எங்கே? இதுவா இன்று நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் கெளரவம் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆகவே தற்போது எல்லோரையும் ஏமாற்றி வருகின்ற நீங்கள் எல்லோரையும் மீண்டும் கண்ணீர் விட்டு அழும் நிலைக்கு கொண்டு செல்லாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நான் கூறுவது எல்லாம் என்னுடைய வேதனையல்ல. அவை ஒவ்வொன்றும் இந்த மக்களின் வேதனைகள் தான்.

மேலும் எமது இளைய தலைமுறையினர் வரலாறுகளையும், உண்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காக செயற்பட முன்வந்தவர்கள் பணம் சேர்ப்பதும் பட்டம் பதவிகளைப் பெறுவதையுமே நோக்கமாக கொண்டிருக்காது மக்களுக்காக நீதியாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும் என ஆணந்தசங்கரி மேலும் தெரிவித்தார்.

-athirvu.in

TAGS: