அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே வரும் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சந்திப்புக்கான ஏற்பாடுகள் நன்முறையில் நடந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இருநாட்டு தலைவர்களும் முதல் முறையாக உள்ளூர் நேரப்படி காலை ஒன்பது மணியளவில் சந்திப்பார்கள் என்றும், இதுகுறித்த தகவல்களை டிரம்ப் தினமும் கேட்டறிந்து வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஆனால், வட கொரியா அணுஆயுதங்களை கைவிட்டால்தான் அதன் மீதான தடைகள் விலக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது.
- ‘தென் சீனக் கடலில் சீனா ஏவுகணைகளை நிறுவியுள்ளது’ – அமெரிக்கா குற்றச்சாட்டு
- ”வட கொரியாவில் தனியார் நிறுவன முதலீட்டுக்கு அமெரிக்கா அனுமதிக்கலாம்”
சிங்கப்பூரால் ஒருங்கிணைக்கப்படும் இந்த சந்திப்பிற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், சந்திப்பு குறித்த ஒருசில தகவல்களே இதுவரை பொதுவெளியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிங்கப்பூரின் எந்த இடத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
அணுஆயுதமற்ற கொரிய தீபகற்பத்தை உருவாக்குவது குறித்த விடயங்களே இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய இடத்தை வகிக்கும் என்று கருதப்படும் நிலையில், கொரிய போரை முறைப்படி முடித்து வைப்பது குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்படும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
டிரம்ப் அறிவித்த இந்த சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறுமா இல்லையா என்பது குறித்த கேள்வி தொடக்கத்திலிருந்தே இருந்து வந்த நிலையில், கடந்த மாத இறுதியில் வட கொரியாவுடன் ஏற்பட்ட வார்த்தை மோதலின் காரணமாக இந்த சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். பிறகு வட கொரிய தூதர் ஒருவரை நேரில் சந்தித்து பேசிய பின்னர் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மீண்டும் அறிவித்தார். -BBC_Tamil