ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கும் நட்டஈட்டை நிராகரித்துள்ள பெருமளவான கேப்பாபுலவு மக்கள், தமது காணிகளை இராணுவத்திடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் சிலர் தமது காணிகளை இராணுவத்திற்கு வழங்கிவிட்டு, அதற்கான நட்டஈட்டைப் பெறுவதற்கு முன்வந்துள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு கேப்பாபுலவில் ஸ்ரீலங்கா படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி, அக் கிராம மக்கள் கடந்த ஒரு வருடத்தையும் கடந்து இன்று (05.06.2018) 460 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் அம்மக்களின் காணிகள் தொடர்பில் விருப்பங்களை கேட்டறியும் கூட்டமொன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் நேற்று (.04.06.2018) மாலை நடைபெற்றுள்ளது.
கேப்பாபுலவில் படையினர் வசம் உள்ள தமது காணிகளுக்கு பதிலாக நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கு சில காணி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் கூறியுள்ளார்.
கேப்பாபுலவில் 55 பேருக்கு சொந்தமான 59.95 ஏக்கர் காணிகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன், தமது காணிகள் தொடர்பான விரும்பத்தை எழுத்துமூலம் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் 37 காணி உரிமையாளர்கள் கலந்துகொண்டு தமது விருப்பங்களை தெரிவித்துள்ளதுடன், இதில் இரண்டு காணி உரிமைளார்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருமளவான காணி உரிமையாளர்கள் தமக்கு காணிகளே வேண்டும் என்பதை வலியுறுத்தினாலும் 05 காணி உரிமையாளர்கள் தமது காணிக்குரிய நட்டஈடு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
-athirvu.in