தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொறுமையோடு இருக்க வேண்டுமென சர்வதேசம் கூட எதிர்பார்க்க வில்லையென்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, எதிர்ப்புகளை இனிமேல் காட்ட வேண்டுமென்றே சர்வதேசம் எதிர்பார்க்கிறது என்றும் குறிப்பிட்டார்.
சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான தொடர்பைப் பேணுகின்றவர் எனவும், அவர்களது நாடித்துடிப்பை அறிந்தவர் என்று தன்னைக் குறிப்பிட்ட அவர், அதன் அடிப்படையிலேயே இதைக் கூறுவதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில், ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய தேவை இருந்தமையாலேயே, பலரது விமர்சனங்களையும் மீறி, கூடிய காலம் ஆதரவு வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தீர்வுத் திட்டத்திலோ அல்லது மக்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலோ முன்னேற்றம் ஏற்படவில்லையாயின், நிர்வாக முடக்கப் போராட்டங்களைச் செய்யப் போவதாக, ஏற்கெனவே தாம் கூறியிருந்ததாகவும், குறிப்பாக, 2014ஆம் ஆண்டே, தாம் அதனைச் செய்வதற்கு ஆயத்தமாகியிருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதெனவும் குறிப்பிட்டார்.
அதன் பின்னரான புதிய அரசாங்கத்துக்குத் தாம் ஒத்துழைப்பாகச் செயற்பட்டாலும், தமது இலக்குகளை மறந்துவிடவில்லை எனக் குறிப்பிட்ட அவர், புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டிய தேவை தமக்கு இருந்தது என்றும், அந்த அவகாசத்தைத் தாம் கொடுத்திருப்பதாகவும், குறிப்பாக, பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் தாம் அதனை அதிகமாகவே கடந்த மூன்றாண்டில் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
“அந்நேரத்தில் சர்வதேச சமூகமும், நாங்கள் சேர்ந்து இயங்க வேண்டுமென்று எதிர்பார்த்திருந்தது. நாம் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்காததாலேயே, அவர்களால் எதனையும் செய்ய முடியாமல் போனதென்ற ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, பலத்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் நாம் ஆதரவு வழங்கியிருந்தோம். ஆனால் இனிமேலும், நாம் அவ்வாறுதான் இருக்க வேண்டுமென எவரும் எதிர்பார்க்கவில்லை.
“அந்த வகையில், யாழ்ப்பாணம், கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தை முற்றுகையிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட நிர்வாகத்தை முடக்கும் போராட்டமானது, வெறுமனே ஒத்திகை மாத்திரமேயாகும்” என, சுமந்திரன் எம்.பி மேலும் கூறினார்.
(எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்)
-tamilmirror.lk