சிங்கள ராணுவத்தோடு கட்டிப் பிடி வைத்தியத்தில் ஈடுபட்ட தமிழர்கள் இவர்கள் தான்

கடந்த பல வருடங்களாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்த மக்கள், 2009-ம் ஆண்டு நடைபெற்று முடிந்த இறுதிப்போரில் பல உறவுகளை இழந்த நிலையில் இராணுவத்தின் மீதும், அன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ மீதும் கடும் கோபத்திலும், வெறுப்பிலும் மீள் குடியேறிய விசுவமடு மக்களின் அன்பை, இராணுவத்திற்கு எதிராகவே துப்பாக்கி தூக்கி போராடிய முன்னாள் போராளிகளின் அன்பை தமிழ் தலைவர்களே பெறாத, அடையாத நிலையில், ஒரு சிங்கள இராணுவ வீரர் (கேணல்) வெறும் 36 மாதங்களில் பெற்றிருக்கின்றார் என்றால் மதம், மொழி , தொழில் அனைத்தையும் தாண்டி அவர் ஒரு மனிதனாக இருந்திருக்கிறார் என்பதே உண்மை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இச் சம்பவம் சிங்கள அரசியல் வாதிகளுக்கும், தென்னிலங்கை மக்களுக்கும் ஒரு விடயத்தையும் தெளிவு படுத்தியுள்ளது, தமிழர்கள் என்பவர்கள் இனவாதிகளோ, வன்முறையாளர்களோ இல்லை, பெருமான்மை இன மக்களான நீங்கள் அல்லது உங்கள் அரசு எந்த ஆயுதத்தை எடுக்கிறீர்களோ! அதை வைத்துதான் சிறுபான்மை மக்களான நாங்களும் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என முடிவு செய்கின்றோம், நீங்கள் அன்பு, அறம் என்னும் ஆயுதத்தை எடுத்தால் நாங்களும் அந்த வழியில்தான் என்பதனை உரக்கச்சொல்லியிருக்கிறது விசுவமடு சம்பவம்.

இந்த சம்பவத்தை மற்றுமொரு கோணத்தில் நோக்கினால் இதே மக்கள் பல தமிழ் அரசியல் வாதிகள் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த போதிலோ, அவர்களுக்கு விபத்துக்கள் இடம்பெற்று உயிருக்கு போராடிய போதிலோ அல்லது வேறு காரணங்களிற்காவவோ நேரில் சென்று பார்த்தோ அல்லது அவர்களுக்காக ஒரு துளி கண்ணீர் சிந்திய வரலாறுகள் உண்டா? மாறாக அவர்கள் நோயினால் அவதிப்பட்ட போதும் சரி அல்லது அவர்களின் உயிருக்கு அல்லது பதவிக்கு ஆபத்துக்கள் வரும் போதெல்லாம் இவர்கள் இறந்துவிட வேண்டும், இவர்கள் பதிவியிழந்து வீதிகளில் நிற்க வேண்டுமென மட்டுமே மக்கள் எண்ணினார்கள், அதற்காக பிராத்தனையும் செய்தார்கள் என்பதே அரசியல் தலைவர்களால் மறுக்க முடியாத உண்மை.

சில தினங்களுக்கு முன்பு வட மாகாண முதலமைச்சர் ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது இராணுவம் வடக்கில் நிலை கொண்டுள்ளதுடன், தமிழ் மக்களின் மனதில் இடம்பிடிக்க தந்திரோபாயங்களை மேற்கொண்டு வருகின்றது என குற்றம் சாட்டியிருந்த நிலையில்தான், இந்த விசுவமடு இராணுவத் தளபதியின் பிரியாவிடையின் போது மக்கள் கண்ணீர் விட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் மனதில் இடம்பிடிக்க இராணுவம் தந்திரோபாயங்களை மேற்கொண்டு வருகின்றது என்றால் விக்னேஷ்வரன் தலைமையிலான வட மாகாணம் மக்களுக்காக என்ன செய்திருக்கின்றது? என்ன செய்ய இருக்கின்றது? வட மாகாண சபையும், இதர தமிழ் தலைவர்களும் இராணுவத்திற்கு அதற்குரிய சூழலை அமைத்துக்கொடுத்திருக்கின்றார்கள் என்பதே உண்மை!

தமிழ் அரசியல் வாதிகளிடம் மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் எதை எதிர்பார்த்தார்கள், பணத்தை கொட்டித்தர வேண்டும் என எதிர்பார்த்தார்களா? அல்லது அபிவிருத்திகளை எதிர்பார்த்தார்களா? இல்லை, அவர்கள் எதிர் பார்த்ததெல்லாம் அவர்களுக்காக அவர்களுடன் இணைந்து அவர்களின் துக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும், மக்களில் ஒருவராக இருக்க வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் என்ற ரீதியில் உங்களுக்கு வருடா வருடம் வரும் பன்முகப்படுத்தப்பட்ட நிதிகளிலிருந்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உங்களால் முடிந்த சிறு உதவிகளையாவது செய்ய வேண்டும் என்பதையே அவர்கள் எதிர்பார்த்தார்கள், இதைத்தான் அந்த இராணுவ தளபதி செய்தார், அதற்கு அந்த மக்கள் காட்டிய நெகிழ்ச்சி ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை குறித்த இராணுவ தளபதி மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்றே செய்தாரா? இல்லையா என்பது இங்கு வாதமில்லை.

கடந்த கால யுத்த வரலாற்றில் பல உயிர்களை இழந்து, சொத்துக்களை இழந்து அனாதையாக நிற்கின்ற அப்பாவி பொதுமக்களுக்கு ஆறுதலாக, ஆதரவாக எந்த தமிழ் தலைவர்களும் இருக்க வில்லை என்பது நிதர்சனமாக புலப்படுகின்றது, அவர்களின் உறவினர்களை அழித்தவர்கள் என்று தெரிந்தும் தங்களின் இந்த நிலைமைக்கு காரணம் இவர்கள்தான் என்று அறிந்தும்கூட குறுகிய காலத்தில் அவர் பழகிய விதத்தையும் செய்த உதவிகளையும் வைத்து இந்த மக்கள் அவரின் பிரிவின் போது கண்கலங்கினார்கள் என்றால் அந்த மக்கள் எந்தளவுக்கு ஒரு அன்புக்காக, ஆதரவிற்காக ஏங்கியிருக்கிறார்கள் என்பதையே நாங்கள் சிந்திக்க வேண்டும்.

ஒரு அரச உத்தியோகத்தரால் (இராணுவம்) பல நபர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும், அவர்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்றால், மக்கள் பிரதிநிதிகள் உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தாள் எவ்வளவோ செய்திருக்கலாம், எவ்வளவோ செய்திருக்க முடியும்.

மாறாக எமது தமிழ் அரசியல் தலைவர்கள் செய்தது என்ன? பல்லாயிரக்கணக்கான உயிர் தியாகங்களை பொருட்படுத்தாமல் அற்ப சொற்ப சலுகைக்காக அரசுடன் இணைந்து சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருவதுடன், பெரும்பாலான நேரங்களில் மக்களின் முக்கிய பிரட்சனைகளை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதை விடுத்து, அவர்களின் தொழிலில் போட்டியாளர்களாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கெதிராகவும், அவர்களின் தொழிலுக்கு நன்மை அளிக்கக்கூடிய திட்டங்கள் குறித்து பேசுவதைமே வழக்கமாக கொண்டுள்ளதுடன், தேர்தல்கள் நெருங்கும் காலங்களில் மட்டும் மேடைகளில் தேசியம் பேசுவதையுமே, இவர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள்.

இது தவிர மக்களின் நிலைமையறிந்து அரச தரப்பு பிரதிநிதிகள் உதவி செய்ய வந்தாலும், எங்கே அவர்களின் உதவிகளை பெற்றுக்கொண்டு மக்கள் அவர்கள் பக்கம் சென்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் அதனையும் விதண்டாவாத அரசியல் பேசி மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்துவிடுகிறார்கள்.

அத்துடன் வரும் பொங்கலுக்கு தீர்வு கிடைக்கும், வரும் சித்திரைப்புத்தாண்டுக்கு தீர்வு கிடைக்கும், தீபாவளிக்கு தீர்வு கிடைக்கும், என்று பல வருடங்களாக ஒரே மாதிரியான அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிடுவதுடன் தீர்வு பற்றிய பேச்சு மறைந்து போகின்றது, தற்போது தமிழ் மக்கள் மத்தியில் இவர்கள் மூலம் எந்த தீர்வும் கிடைக்காதென்று நம்பிக்கையெழுந்துள்ளது.

ஒரு சிங்கள இராணுவ தளபதி தமிழ் மக்களின் உணர்வுகளை, தேவைகளை புரிந்துகொண்டு செயல்பட்டு மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார் என்றால், நாங்கள் எங்கே நிற்கின்றோம்? என்ன செய்கின்றோம் என்பதை ஒவ்வொரு தமிழ் அரசியல் தலைவர்களும் ஒரு நிமிடம் சிந்தித்து பார்ப்பதுடன், இனிவரும் காலங்களிலாவது மக்களுக்காக, மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்பட உறுதிகொள்ளுங்கள், இப்படி மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மக்களுக்காக செயல்படமுடியாவிட்டால், உங்கள் தலைமுறைக்கே சொத்து சேர்த்து விட்டீர்கள், தயவு செய்து மக்களுக்காக உயிரைக்கூட கொடுக்க கூடிய இளைஞர்கள் கூட்டம் பின்னால் நிற்கிறது அவர்களுக்காவது வழியை விட்டு ஒதுங்கி நில்லுங்கள், அப்போதாவது கடந்தகால யுத்தத்தின் போது உயிரிழந்த இலட்சக்கணாக்கான ஆத்மாக்கள் உங்களை மன்னிக்க வாய்ப்பிருக்கின்றது என்பதே தமிழ் மக்களின் கருத்துக்களாக உள்ளது.

(ந.ஜெயகாந்தன்)

-athirvu.in

TAGS: