உதவி கோரிய முன்னாள் போராளி; விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

இடுப்புக்கு கீழ் இயங்கமுடியாத நிலையில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டுக்கு நேற்று (15.06.2018) மாலை விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவரின் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளார்.

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக மிகவும் வறிய நிலையிலும் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை தூக்கி போராடியவரலாறு வடகிழக்கில் உள்ளது.

தமது குடும்பத்தின் நிலமையினையும் கருத்தில் கொள்ளாமல் களத்தில் நின்று போராடியபோதும் அவர்களின் குடும்பத்தின் நிலை மிகமோசமான நிலையிலேயே இருந்துவந்தது.

யுத்தம் முடிந்துள்ளபோதிலும் அவர்களின் நிலையென்ன அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றுகூட பார்க்கும் நிலையில் இன்று தமிழ் மக்கள் இல்லாமல்போனது கவலைக்குரிய விடயமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய எல்லைக்கிராமங்களில் ஒன்றான கரவெட்டியாறு பகுதியில் முன்னாள் போராளியொருவர் இடுப்புக்கு கீழ் இயங்கமுடியாத நிலையில் மிகவும் கஸ்டமான நிலையில் வாழ்ந்து வருகிறார்

தமிழ் மக்களுக்காக போராட்ட களம் சென்று பல்வேறு இழப்புகளை எதிர்கொண்ட ஒரு குடும்பத்திலேயே இந்த போராளி இன்று யாரும் கைகொடுக்காத நிலையில் வசித்துவருகின்றார்.

மட்டக்களப்பு கரவெட்டியாறு கிராமத்தில் ஜெயந்தன் படை போராளியான திலீபன் என்கிற வடிவேல் தில்லையம்பலம் 48 வயது என்பவரே இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளார்.

இவரை ஒரு வயோதிப தாயாரே கவனித்து வருகின்றார். இவருடைய தகப்பனாரான வடிவேல் என்பவரும் நடக்க முடியாது உள்ளார்.

இவரை வைத்தியசாலைக்கு கொண்டு பராமரிக்க ஒருவரும் இல்லாத நிலையில் இவர் தொடர்ந்தும் படுத்த படுக்கையாக உள்ளார். இவருக்கு சக்கர நாற்காலி மற்றும் மலசலகூட வசதிகள் எதுவும் இன்றி கஷ்டப்பட்டு வருகின்றார்.

1990-ஆம் ஆண்டு தனது சிறு வயதில் புத்தகப்பையை தூக்கி வீசிவிட்டு தனது இனத்திற்காக போராடச்சென்றவரே இவராகும். ஆனால் அந்த இனம் இன்று அந்த குடும்பத்திற்கு என்ன செய்தது என்பது மிகவும் கவலைக்குரியதாகும்.

இவரது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் இழந்து தவிக்கும் இவர் தனது குடும்பத்தையும் பிரிந்து வாழ்கிறார்.

இவரது குடும்பத்தில் இரண்டு மாவீரர்கள் களப்பலி ஆகியுள்ளனர், இவரது அக்காவான விஜித்தா என்பவரின் பெயரிலேயே கரவெட்டியாறு விஜித்தா தமிழ் கலவன் பாடசாலை இயங்கி வந்துள்ளது.

மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் வைத்திய உதவிகள் இன்றி படுத்த படுக்கையாக இருக்கும் திலீபனை காப்பாற்றி அவருக்கு மறுவாழ்வளிக்க முன்வருமாறு புலம்பெயர் அமைப்புக்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றார் அவரது தாய்.

மிகவும் வேதனையுடனும் கஸ்டங்களுடனும் தமது வாழ்வினை நடாத்திக்கொண்டிருக்கும் இந்த குடும்பத்திற்கு உதவ பரோபகாரிகள் முன்வருவார்களா.?

இதேநேரம் குறித்த போராளியின் வீட்டுக்கு நேற்று (15.06.2018) மாலை விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவரின் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது தன்னால் முடிந்த உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் இதன்போது அவர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: