சிரியா, காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் நடக்கும் சண்டைகள், உலக அளவில் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளதாக ஐ.நா அகதிகள் உயர் ஆணையம் கூறியுள்ளது.
உலகில் 68 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அகதிகளாகவோ, தஞ்சம் கோருபவர்களாகவோ, சொந்த நாட்டுக்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாகவோ வாழ்வதாக அதன் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் தீர்வு எட்டப்படாத நிலையில் இருக்கும், நீண்ட நாட்களாக தொடரும் சண்டைகளால் இந்த நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.
தற்போதைய பிரச்சனையின் அளவு பணக்கார நாடுகளை தாராளமாகவும், ஒருங்கிணைந்தும் செயல்படத் தூண்டும் என்றும் ஐ.நா அகதிகள் உயர் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- அகதி முகாம் முதல் உலகின் ‘நம்பர் ஒன்’ பௌலர் ஆனது வரை – ரஷீத் கான்
- உயிரை பணயம் வைத்து தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்
“வன்முறை மற்றும் போரால் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ள அந்த 68.5 மில்லியன் மக்களால் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாது. அவர்களைக் கட்டாயப்படுத்தி நாடு திரும்ப வைத்தால் அவர்கள் உயிருக்கு ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்,” என்று ஐ.நா அகதிகள் உயர் ஆணையத் தலைவர் பிலிப்பினோ கிரேண்டி பிபிசியிடம் கூறியுள்ளார்.
குடியேற்றங்களை நெறிப்படுத்துவதன் மூலம், அந்த மக்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் அமைப்பு முறையைத் தவறுதலாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். -BBC_Tamil