தமிழ் மக்களை விலைகொடுத்து வாங்குவதற்கான நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா அரசு..

போரினால் பேரழிவை சந்தித்த தமிழ் மக்களை விலைகொடுத்து வாங்குவதற்கான நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா அரசும் இராணுவமும் ஈடுபட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு விஸ்வமடு பிரதேச மக்களின் கண்ணீருடனான பிரியாவிடை பெற்றுச்சென்று இடமாற்றம் இரத்துச்செய்யப்பட்டு மீண்டும் திரும்பியுள்ள கேர்ணல் ரத்னப்பிரிய பந்துவிற்கு விஸ்வமடு மக்கள் அளித்த உணர்ச்சிபிரவாகத்துடனான பிரியாவிடை தொடர்பில் சுட்டிக்காட்டி முதலமைச்சர் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு படையணியின் விஸ்வமடு முகாம் பொறுப்பதிகாரியான கேர்ணல் ரத்னப்பிரிய பந்து, அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமிற்கு இடம்மாற்றம் பெற்ற நிலையில் அவருக்கு பிரியாவிடை நிகழ்வொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிவில் பாதுகாப்பு படையணியிலும் அந்த படையணியால் நிர்வகிக்கப்படும் பண்ணைகளிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள முன்னாள் போராளிகள், முன்னாள் போராளிகளது குடும்பத்தினர் ஆகியோர் கதறி அழுது கண்ணீர்மல்க கேர்ணல் பந்துவை இடமாற்றம் பெற்று செல்ல வேண்டாம் என்று மன்றாடினர்.

இந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட நிலையில் அனைவரிதும் கவனத்தை இந்த சம்பவம் ஈர்த்திருந்தது.

இந்த நிலையில் இடம்மாற்றப்பட்ட கேர்ணல் பந்துவை, மீண்டும் விஸ்வமடு முகாமின் பொறுப்பதிகாரியாக பணியமர்த்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பினரும், அரசாங்கத்தின் அமைச்சர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கமைய அவரது இடமாற்றத்தை இரத்துச்செய்த சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, கேர்ணல் பந்துவை சிறிலங்கா இராணுவதின் சிவில் பாதுகாப்பு படையணியின் விஸ்மடு முகாம் பொறுப்பதிகாரியாக மீண்டும் பணியில் அமர்த்தினார்.

சிறிலங்கா அரச தலைவரை அவரது சொந்த ஊரான பொலன்னறுவையில் வைத்து நேரில் சந்தித்த கேர்ணல் இரத்தனப்பிரிய பந்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சிறிலங்கா அரச தலைவரின் புதல்வரான தஹாம் சிறிசேன பொலன்னறுவையில் ஏற்பாடு செய்திருந்த மென்பந்து போட்டியை பார்வையிட சென்றிருந்த போது சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவை, கேர்ணல் பந்து நேரில் சந்தித்து இடமாற்றத்தை இரத்து செய்ததற்காக நன்றி தெரிவித்திருக்கின்றார்.

இந்த சந்திப்பின் போது போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கேர்ணல் பந்து ஆற்றிய சேவையையும் சிறிலங்கா அரச தலைவர் பாராட்டியதாக அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மாங்குளம் பகுதியில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்ட வட மாகாண முதலமைச்சர், கேர்ணல் பந்து போன்றவர்களுக்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவதற்காக பெறுந்தொகை நிதி எங்கிருந்து என்ன நோக்கத்திற்காக கிடைக்கின்றது என்ற உண்மையை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

-athirvu.in

TAGS: