உதவி செய்வோரை நன்றியுடன் கௌரவப்படுத்தும் பண்புடைய தமிழர்கள், அந்த உதவிகளுக்குப் பின்னால் அரசியல் இருந்தால் அவற்றையும் அடையாளம் கண்டுகொள்வார்கள் என சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவை வடமாகாண முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்க முன்வருமாறு சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிடம் வடமாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளிசொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் மைதானத்தில் இன்றைய தினம் (18.06.2018) இடம்பெற்ற சிறுவர்களை பாதுகாப்போம் செயற்திட்ட ஆரம்ப விழாவில் கலந்துகொண்ட சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிடம் குறித்த கோரிக்கையை விடுத்த முதலமைச்சர், பிரிந்திருக்கும் மாகாண சபைகள் விரும்பினால் மீண்டும் இணைவதற்கான உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் சிறுபான்மையின சமூகங்களான தமிழ் – முஸ்லிம் மக்களிடையே மோதல்களை ஏற்படுத்த சிறிலங்கா அரச தரப்பு பல்வேறு சூழ்சிகளையும் மேற்கொண்டுவருவதாகவும் குற்றம்சாட்டிய முதலமைச்சர் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த விழாவின் ஆரம்பத்தில் சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய செயற்திட்டத்தின் இலக்குகளை தெளிவுபடுத்திய சிறிலங்கா அரச தலைவர் யுத்தத்தினால் சிறுவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பாடசாலைகள், பொலிஸ் நிலையங்கள் உட்பட அரச அலுவலகங்களில் சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் ஏற்றுக்கொண்ட சிறிலங்கா அரச தவைர், வீடுகளில் சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாவது குறித்தும் அதிர்ச்சி வெளியிட்டார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் யூன் 12 ஆம் திகதி சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான அமைச்சர்களினால் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு நடட்ஈடு வழங்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாலேயே குறித்த யோசனை கைவிடப்பட்டிருக்கின்றது. இதுகுறித்து கவலை வெளியிட்ட வட மாகாண முதலமைச்சர், முன்னாள் போராளிகள் என்பதற்காக அவர்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று கடிந்துகொண்டார்.
போரினால் பெற்றோரை இழந்துள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட சிறுவர்களுக்கு உதவும் நோக்கில் செயற்திட்டத்தை ஆரம்பித்த சிறிலங்கா அரச தலைவரை பாராட்டிய வட மாகாண முதலமைச்சர், உதவி செய்வோரை நன்றியுடன் கௌரவப்படுத்தும் பண்புடைய தமிழர்கள் அந்த உதவிகளுக்குப் பின்னால் அரசியல் இருந்தால் அவற்றையும் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்றும் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.
-athirvu.in