முல்லைத்தீவில் மீண்டும் விடுதலைப்புலிகள்?

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் இன்று (22.06.2018) காலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியுடன், வெடிபொருட்களை வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் முல்லைத்தீவு மற்றும் நெடுங்கேணி பகுதிகளில் பல்வேறு இடங்களில் இராணுவம், பொலிசார், விசேட அதிரடிப்படையினர் பாரிய தேடுதல் வேட்டையொன்றை மேற்கொண்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனையிட முற்பட்டபோது விடுதலைப்புலிகளின் கொடி, சீருடை, வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் முச்சக்கர வண்டி சாரதி உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், எனினும் இதன்போது அங்கிருந்த மேலுமொருவர் தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸ் உயரதிகாரிகள், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், இராணுவம் புலனாய்வாளர்கள் என பலர் பொலிஸ் நிலையத்தில் குவிந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தப்பியோடியவரை கைதுசெய்வதற்காக பொலிஸாரும் இராணுவம் இணைந்து பாரிய தேடுதல் வேட்டையொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மற்றும் நெடுங்கேணி பகுதிகளில் பல்வேறு இடங்களில் இந்த தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதேச மக்கள் மத்தியிலும், முன்னாள் போராளிகள் மத்தியிலும் இன்றைய சம்பவங்களம் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

-athirvu.in

TAGS: