போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடிய ஜமால் முகம்மட் யூனுஸ் இன்னும் தலைமறைவாகத்தான் இருக்கிறார். அவரைப் பிடிக்கும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
அம்னோ தேர்தலுக்கு வருவார் என்று கட்சித் தேர்தல் நடைபெறும் அம்னோ தலைமையகத்தில் காத்திருந்ததாகவும் அங்கும் அவர் வரவில்லை என்றும் சிலாங்கூர் சிஐடி தலைவர் பாட்சில் அஹ்மட் கூறினார்.
ஜமால் சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளவும் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகிறார்.
“இன்னும் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அவரைக் கைது செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கண்டதும் அவரைக் கைது செய்வோம்.
“அம்னோ (தலைமையகம்) வந்தாரா? இல்லை.
“வந்திருந்தால் கைது செய்திருப்போம். சலித்து விட்டது. பிடிபடும்வரை அவரை விடப்போவதில்லை”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஜமாலின் இருப்பிடம் அறிந்தவர்கள் தகவலளிக்க வேண்டும் என்றும் பாட்சில் கேட்டுக்கொண்டார்.