தலைவர் பிரபாகரனுக்கு ஞானசார தேரர் புகழாரம்!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு நரி என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் குறிப்பிட்டிருந்தது உண்மையான ஒரு விடையம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை நம்பி தமிழ் முஸ்லிம் மக்கள் ஏமாறக் கூடாது என்றும் சிறை தண்டனையிலிருந்து பிணையில் விடுதலையாகியுள்ள கலகொட அத்தே ஞானாசார தேரர் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

கொழும்பிலுள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஞானாசார தேரர், சிங்கள மக்களுக்கு முகம் கொடுத்த அநீதிகளை பற்றி கடந்த காலங்களில் ஆட்ச்சி செய்தவர்கள் முடிவெடுப்பதாக கூறியிருந்தாலும் இதுவரையில் அதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அதனாலேயே தான் உட்பட சிலர் சிங்கள பௌத்த மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்க முற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், எனினும் தங்களது இந்த நடவடிக்கைகளை தடுக்க ஆட்சியிலுள்ளவர்கள் பல வழிகளை கையாள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நடவடிக்கைகளைத் தடுக்கவோ அதற்கு எதிராக குரல்கொடுக்கவோ, சிங்கள மக்களுக்காக குரல்கொடுத்து வருவதாக கூறிவரும் மஹிந்த ராஜபக்சும் கருத்தில்கொள்ளவில்லை என்றும் ஞானாசார தேரர் வருத்தம் வெளியிட்டார்.

தமிழீழ விடுதலை புலிகளின் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசின்கவை தந்திர நரி எனக்குறிப்பிட்டது சரியானது என்றும் தெரிவித்தார் அவர், தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருவதாக கூறி ரணில் தொடர்ச்சியாக ஏமாற்றி திரிவதாகவும் சாடியுள்ளார்.

அதேவேளை தான் உட்பட பொதுபல சேனா அமைப்பு ஒருபோதும் தமிழ் – முஸ்லீம் மக்களின் உரிமைகளை பறிக்கவில்லை என்றும் கூறிய ஞானாசார தேரர் கடந்த 2010, 15 ஆம் ஆண்டுகளில் இருந்த ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய ஆட்சியிலும் தனக்கு ஜம்பர் அணிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதென மேலும் தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: