சிறுத்தை கொலை 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

கிளிநொச்சி- அம்பாள்குளம் கிராமத்துக்குள் உள்நுழைந்த சிறுத்தையை தடிகளால் ​அடித்துக் கொலை   செய்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 10 பேரையும்,  எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  கிளிநொச்சி நீதவான் கே.கணேசராஜா இன்று (29) உத்தரவிட்டுள்ளார்.

சிறுத்தை கொலை விவகாரம் தொடர்பில் கடந்த 25 ஆம் திகதி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சிறுத்தை கொலையுடன் தொடர்புடைய மேலும் 4 சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கல்விசாரா ஊழியராக கடமையாற்றும் தியாகராஜா சுகன் (22), கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியைச் சேர்ந்த பிரசாத் (23), நடராஜா மொகன்ராஜ் (42), நடராஜா சுபுமார் (39), கிருஸ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த பிருந்தன் (24), மற்றும் தர்மபுரம் பகதியைச் சேர்ந்த தம்பிராசா தவராசா (27), ஆகியோரே. இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்த காணொளியை பயன்படுத்தி சந்தேகநபர்கள் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி உணவு தேடி அம்பாள்குளம் பிரதேசத்துக்கு வந்திருந்த சிறுத்தை​யையே, இவ்வாறு பலர் இணைந்து அடித்து கொலை செய்துள்ளனர். இவ்வாறு சிறுத்தையை கொன்று அவர்கள் அதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் 10 காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-tamilmirror.lk

TAGS: