மன்னார் மனிதப்புதைகுழி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சிறிலங்கா அரச படையினரால் கைதுசெய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மன்னார் சதோச மனிதப் புதைகுழியில் இடம்பெற்றுவரும் அகழ்வு பணிகள் கைவிடப்படும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

மனிதப் புதைகுழியில் இடம்பெறும் அகழ்வு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு தேவையான போதிய நிதி இன்மை காரணமாக, அகழ்வு பணிகளை நிறுத்த வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுக்கொண்டிருப்பதாக விசாரணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் தொல்பொருள் ஆய்வு நிபுணர்களின் தகவல்களுக்கு அமைய இதுவரை 12 வயது சிறுவன் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டவர்களின் மனித எச்சங்கள் சதோச மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டிருக்கின்றன.

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் யூன் 28-ஆம் திகதியான இன்றைய தினம் வியாழக்கிழமை 23-ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரனின் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு மன்னார் மாவட்ட விசேட சட்ட வைத்திய நிபுணர் சாமிந்த ராஜபக்ஸ தலைமை தாங்கிவருகின்றார். அவருடன் இணைந்து தொல்பொருள் ஆய்வாளரான களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அகழ்வு பணிகளுக்கு மனித வளம் அதிகமாக தேவைப்பட்டதால் தற்போது நாட்டின் பல பிரதேசங்களிலும் இருந்தும் சட்ட வைத்திய நிபுணர்கள், பயிற்சி நிலை அதிகாரிகள், தொல்பொருள் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், பல்கழைகழக மாணவர்கள் மற்றும் நிபுணத்துவ அகழ்வுப் பணியாளர்கள், உடற்கூற்றியல் நிபுணர்கள் என பலரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக சந்தேகத்திற்குரிய விதமாக மனித எச்சங்கள் சதோச மனித புதைகுழியில் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன.

மண்டையோடுகள், பகுதி அளவிலான எழும்பு கூடுகள், முழு மனித எலும்பு கூடுகள் உட்பட ஏராளமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் சதோச மனித புதைகுழியை முழுமையாக அகழ்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எனினும் இந்த அகழ்வுப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும், அகழ்வு பணிகளுக்கு மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ள சட்ட வைத்திய நிபுணர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள், பயிற்சி நிலை அதிகாரிகள், பேராசிரியர்கள், பல்கழைகழக மாணவர்கள் மற்றும் நகர சபை ஊழியர்களுக்கான உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேவையான நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிதி பற்றாக்குறை தொடர்பில் யூன் 25-ஆம் திகதி மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலும் சுட்டிக்காட்டியதாக மன்னார் மாவட்ட சட்ட மருத்துவ நிபுணர் சாமிந்த ராஜபக்ச மற்றும் பேராசிரியர் ராஜ் சோம தேவா ஆகியோர் தெரிவித்தனர்.

அதேவேளை நீதி அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச தரப்பினருக்கும் சதோச மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் சட்ட மருத்துவ நிபுணர் ராஜபக்ச குறிப்பிட்டார். எனினும் இதுவரை அவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறிய மருத்துவ நிபுணர் சாமிந்த ராஜபக்ச, நிதி கிடைக்காதுவிட்டால் அகழ்வு பணிகளை கைவிட நேரிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் மனிதப் புதைகுழியில் அகழ்வு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செயல்வதற்குத்தேவையான நிதியை பெற்றுக்கொடுக்க மன்னார் ஆயர் இல்லம் மற்றும் அருட்தந்தையர்கள் முன்வந்துள்ள போதிலும் அந்த நிதிகளை ஏற்றுக்கொள்ள சதோச மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கு தலைமை வகிக்கும் சட்ட வைத்திய நிபுணர் மறுத்துவிட்டார்.

அரச தவிர்ந்த ஏனைய தரப்பினரிடம் இருந்து நிதியை பெற்று அகழ்வுப் பணிகளை மேற்கொண்டால் தம்மீது இருக்கும் நம்பகத்தன்மையும் தமது சுயாதீனத்தன்மையையும் இழக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ள சட்ட மருத்துவ நிபுணர் ராஜபக்ச, தாங்கள் வழங்கும் இறுதி ஆய்வு அறிக்கையும் பக்கச்சார்பானது என குற்றம்சாட்டப்படலாம் என்றும் தெரிவித்தார்.

இதனாலேயே நிதி வழங்க பல்வேறு தரப்பினர் முன்வந்தும் அதனை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்படும் மனித எச்சங்கள் கடந்த காலங்களில் இராணுவம் உள்ளிட்ட சிறிலங்கா அரச படையினரால் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுத்துவரும் பொது அமைப்புக்களும், காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்களும், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகளும் சந்தேகம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: