ஆப்கானிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: 17 சீக்கியர்கள், இந்துக்கள் பலி

கிழக்கு ஆஃப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தபட்சம் 19 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் அந்நாட்டின் சிறுபான்மையினராக உள்ள சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள்.

நாங்கர்ஹர் மாகாணத்துக்கு வந்துள்ள அதிபர் அஷ்ரப் கனியை சந்திப்பதற்கு தாங்கள் வாகனத்தில் இவர்கள் சென்றுகொண்டிருக்கும்போது குண்டு வெடித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

அக்டோபர் மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டிருந்த ஒரே சீக்கிய வேட்பாளரும் இந்த தாக்குதலில் உயிரிழந்தார்.

இந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக ஐ.எஸ். அமைப்பு அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர்தான், இரண்டு நாள் பயணமாக நாங்கர்ஹர் மாகாணத்துக்கு வந்துள்ள அதிபர் அஷ்ரப், ஜலாலாபாத்தில் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்தார். இந்த தாக்குதல் நடைபெறும் சமயத்தில் அவர் அங்கு இல்லை.

ஐஎஸ் அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல்: ஆஃப்கானிஸ்தானில் 17 சீக்கியர்கள் பலி

காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் “கோழைத்தனமான பயங்கரவாத” தாக்குதலைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.

“இந்த தாக்குதல் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு உலகளாவிய யுத்தம் தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று இந்தியத் தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

ஐஎஸ் அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல்: ஆஃப்கானிஸ்தானில் 17 சீக்கியர்கள் பலி

இறந்தவர்களில் 17 பேர் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் என்றும், அதைத்தவிர்த்து 20 பேர் காயமடைந்துள்ளதாவும் அம்மாகாணத்தின் சுகாதாரத்துறை இயக்குனர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆப்கானிஸ்தானில் சீக்கியர்களும், இந்துக்களும் குறைந்த அளவில் வாழ்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் அதிகரித்துவரும் வன்முறை மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களின் காரணமாக இவர்களில் கணிசமானோர் இந்தியா சென்றுவிட்டதாக அங்குள்ள பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். -BBC_Tamil