நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூற்றுப்படி தமது வங்கிக் கணக்கில் ரிம2.6 பில்லியன் இருந்தது பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி அக்தார் அசிஸுக்குத் தெரியும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறியிருந்தது குறித்து ஸெட்டி மனக்குழப்பத்தில் இருக்கிறார்.
இன்று காலை நிதி அமைச்சில் நடைபெற்ற ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பின் போது அவ்விருவரும் சந்தித்த போது ஸெட்டி இதைத் தம்மிடம் கூறியதாக குவான் எங் கூறினார்.
ஸெட்டி குழப்பமடைந்திருக்கிறார். இது முற்றிலும் போலியானது, அடிப்படையற்றது மற்றும் உண்மையல்ல என்று ஸெட்டி கூறியதாக குவான் எங் புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்துமாறு தாம் ஸெட்டிக்கு ஆலோசனை கூறியதாக அவர் தெரிவித்தார்.
ஸெட்டி நிச்சயமாக அதைச் செய்வார் என்று தாம் நம்புவதாக குவான் எங் மேலும் கூறினார்.