தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க வேண்டும் என்று கூறிய சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுப் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கின்றார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உடனடியாக அமுலுக்குவரும் வகையில் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விஜயகலா மகேஸ்வரனை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வுகளை வழங்கும் நோக்கில் சிறிலங்கா ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் நடமாடும் சேவை நேற்றைய (02.07.2018) தினம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
சிறிலங்கா அரசாங்கத்தின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோர் கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிராக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஆளும் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தென்னிலங்கை கட்சிகளும் அதேபோல்
மஹிந்த அணியினரும் கடும் ஆத்திரம் வெளியிட்டுவருவதுடன், விஜயகலா மகேஸ்வரன் அரசியல் யாப்பை மீறியுள்ளதால் அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய (03.07.2018) தினம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விஜயகலா மகேஸ்வரனை இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையிலேயே விஜயகலா மகேஸ்வரனை இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அறிவித்திருக்கின்றார்.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியதன் மூலம் அரசியல் யாப்பையும், நாட்டின் சட்ட திட்டங்களையும் மீறியுள்ளரா என்பது தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய சிறிலங்கா சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-athirvu.in