யாழில் அதிகரித்துள்ள கலாசார சீரழிவுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள்தான் காரணம்!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள கலாசார சீரழிவுகளுக்கும் பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் நிதியே காரணம் என வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு முன்னர் தமிழ் சமுகம் எவ்வாறு ஒழுக்க விழுமியங்களுடன் வாழ்ந்ததோ அதேபோன்ற ஒரு நிலை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்தும் நாடு முழுதும் இடம் பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை கண்டித்தும் இன்று (03.07.2018) செவ்வாய்க்கிழமை காலை – மன்னார் முருங்கனில் அமைதி பேரணி இடம் பெற்றது.

மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் முருங்கன் வைத்தியசாலைக்கு முன்னால் குறித்த பேரணி ஆரம்பமானது.

குறித்த பேரணியில் அருட்தந்தையர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புக்கள், அப்பிரதேச வர்த்தகர்கள், பெண்கள் அமைப்புக்கள், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்து முருங்கன் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு தெரிவித்தனர்.

குறித்த பேரணி பிரதான வீதியூடாக முருங்கன் பேருந்து தரிப்பிடத்தை சென்றடைந்ததுடன் அங்கு கண்டன உரைகள் இடம்பெற்றன.

அத்துடன் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் உரிய தரப்பினருக்கு கையளிக்கும் வகையில் வடமாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த கண்டன பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய பா.டெனிஸ்வரன் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, பாடசாலை றெஜீனாவின் கொலையினை கண்டித்தும் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்துமாறு கோரியும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம் புதுக்குடியிருப்பு சந்தியில் ஆரம்பித்து பாடசாலை வரை சென்றடைந்துள்ளது.

இந்த போராட்டத்தின் போது பெண் என்பவள் போதைப்பொருள் அல்ல,தொடருமா இந்த அவலம், கண்மூடியதா நல்லாட்சி என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

-athirvu.in

TAGS: