இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், புலிகள் அமைப்பு தொடர்பாகத் தெரிவித்த கருத்து, அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதொரு விடயமல்ல என்று, இலங்கையின் அரசியல் ஆய்வாளரும், சட்டமாணியுமான வை.எல்.எஸ். ஹமீட் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.
“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீளவும் உருவாக வேண்டும்” என்று, சர்ச்சைக்குரிய கருத்தொன்றினைத் தெரிவித்த விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்கிற கோஷங்கள் எழுந்துள்ள நிலையிலேயே, வை.எல்.எஸ். ஹமீட் இந்த வாதத்தினை முன்வைத்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர் பதவியை வகித்த விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது; “விடுதலைப் புலிகள் அமைப்பு மீளவும் உருவாக வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் 06 வயதுடைய பாடசாலைச் சிறுமியொருவர் அண்மையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையினை சுட்டிக்காட்டிப் பேசிய அமைச்சர் விஜயகலா; “நாங்கள் நிம்மதியாக வீதியில் நடமாட வேண்டுமாக இருந்தால், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் சென்று – மீண்டும் வீடு திரும்ப வேண்டுமாக இருந்தால், வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் கைகள் ஓங்க வேண்டும்” என்றும் தனது உரையில் கூறியிருந்தார்.
இதனையடுத்து, விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் பாரிய கண்டனங்கள் எழுந்தன. இதன் காரணமாக, விஜயகலாவின் அமைச்சர் பதவியைப் பறிக்குமாறு அவரின் கட்சித் தலைவரும் பிரதம மந்திரியுமான ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையினை அடுத்து, தான் வகித்த ராஜாங்க அமைச்சர் பதவியினை விஜயகலா ராஜிநாமா செய்தார்.
இருந்தபோதும், இலங்கை அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு, மீண்டும் உருவாக வேண்டும் என்று கூறிய, விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்று, கணிசமான அரசியல்வாதிகள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே, விஜயகலாவின் சர்ச்சைக்குரிய அந்தப் பேச்சு – அரசியலமைப்பு சட்டத்தை மீறவில்லை என்றும், அதனால் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையினை பறிக்க முடியாது என்றும் வை.எல்.எஸ். ஹமீட் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்:
- விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து: அமைச்சர் விஜயகலா ராஜிநாமா
- பிரபாகரனுக்கு ஆதரவாக விக்னேஸ்வரன் கருத்து: ஒரு புது சர்ச்சை
- புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சர் மீது நடவடிக்கை: சபாநாயகர் அறிவிப்பு
இது தொடர்பாக அவர் பிபிசி. தமிழுக்கு அரசியலமைப்பை ஆதாரங்காட்டி விளக்கமளிக்கையில்;
“விஜயகலாவின் அந்த உரைக்காக, அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட வேண்டுமானால், இலங்கை அரசியலமைப்பின் 157(அ) மற்றும் 161(ஈ) ஆகிய சரத்துக்களுடன் அவரின் உரையினை தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.
157(அ) சரத்தின் 01ஆவது பிரிவு; ‘இலங்கையிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரும் இலங்கை நிலப்பிராந்தியத்துக்குள் ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கவோ, நிதிவழங்கவோ, பிரசாரம் செய்யவோ, அல்லது அச்செயலை முன்கொண்டு செல்லவோ அல்லது அதற்கு தைரியம் அல்லது உற்சாகம் கொடுக்கவோ கூடாது’ என்று கூறுகிறது.
அரசியலமைப்பின் மேற்படி சரத்தினை ஒருவர் மீறுவாறாராயின் அவருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனைகள் என்னவென்று, 157(அ) சரத்தின் 03ஆவது பிரிவு கூறுகிறது. அவை;
அ) ஏழு வருடத்துக்கு மேற்படாத காலத்துக்கு குடியுரிமை முடக்குதல்.
ஆ) அவருடைய குடும்ப வாழ்வுக்கு அவசியமானவை தவிர்த்து, அவருடைய ஏனைய அசையும் அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்.
இ) ஏழு வருடத்துக்கு மேற்படாத காலத்துக்கு குடியுரிமைக்கு உரித்தில்லாமல் ஆக்குதல்.
ஈ) அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அரச உத்தியோகத்தவராகவோ (அரசியலமைப்பின்165ஆம் சரத்தில் குறிப்பிட்டபடி) இருந்தால் அந்தப் பதவியை இழத்தல் வேண்டும்”.
“இதன்படி, விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய உரைக்காக, அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டுமானால், அந்த உரையானது அரசியலமைப்பின் 157(அ) சரத்தினை மீறியிருக்க வேண்டும். அதாவது, இலங்கையினுள் ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கு விஜயகலாவின் உரை ஆதரவளித்திருக்க வேண்டும்.
ஆனால், ‘விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்’ என்று விஜயகலா கூறியமையானது, தனி நாடொன்றினை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்துக்காக அல்ல. சீரழிந்து போய் கிடக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கினை சீர்படுத்த வேண்டும் என்பதற்காகவே, ‘விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும்’ என, அவர் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் பார்த்தால், விஜயகலா மகேஸ்வரனின் உரை, அரசியலமைப்பை மீறவில்லை” என்று, வை.எல்.எஸ். ஹமீட் விபரித்தார்.
அவர் மேலும் கூறுகையில்; “வேண்டுமானால், குற்றவியல் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை விசாரிக்க முடியும். ஆனால், விஜகலாவின் சர்ச்சைக்குரிய உரையானது, ஒரு குற்றச் செயலா என்கிற கேள்வியும் உள்ளது. ஒரு குற்றம் நடந்துள்ளதாக உறுதிப்படுத்த வேண்டுமாயின் – அங்கு குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதையும், அந்தச் செயல் – குற்ற மனதுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.
‘ஹிட்லரைப்போல் மாறியாவது இந்த நாட்டைக் கட்டியெழுப்புங்கள்’ என்று, பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளரும், மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷவிடம், பௌத்த பிக்கு ஒருவர், அண்மையில் வேண்டுகோளொன்றினை முன்வைத்திருந்தமையை இந்த இடத்தில் நினைவுபடுத்துல் பொருத்தமானதாகும்.
“ஹிட்லர் என்பவர் ஒரு சர்வதிகாரி, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த ஒருவராவார். அவ்வாறான ஹிட்லரைப் போல் மாறுமாறு பௌத்த பிக்கு கூறியமைக்கு அர்த்தம்; ஹிட்லரைப்போல் குற்றங்கள் செய்யுங்கள் என நாம் எடுத்துக் கொள்ள முடியுமா?” என்றும் ஹமீட் கேள்வியெழுப்பினார்.
மேலும், விஜயகலா மகேஸ்வரன் உணர்ச்சிவசப்பட்டு பேசிய ஒரு விடயத்தை, பலரும் சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பயன்படுத்தி வருவதாகவும், அரசியல் ஆய்வாளர் வை.எல்.எஸ். ஹமீட் சுட்டிக் காட்டினார். -BBC_Tamil