தமிழ்நாட்டில் தங்கியுள்ள 4000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுபற்றி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு தகவல் அனுப்பியுள்ளது.
பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது கீச்சகப் பக்கத்தில் இதுபற்றிய பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
“இலங்கை அகதிகளை தாயகத்துக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு, கடித மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று, நடவடிக்கை எடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு எனது நன்றி.
முதற்கட்டமாக 4000 அகதிகளை கப்பல் மூலம் அனுப்பி வைக்கவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் அவர்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும்” என்று அந்த கீச்சகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் கடந்த மாதம் 28ஆம் நாள், தலைமன்னார் இறங்குதுறையின் நிலையைப் பார்வையிட்டிருந்தார்.
தலைமன்னாருக்கு கப்பல் மூலம், அகதிகளை அனுப்பி வைக்கும் நோக்கில், அவரது இந்த ஆய்வுப் பயணம் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-puthinappalakai.net