இலங்கை இராணுவத்தால் தனிமையில் வசிக்கும் தமிழ் பெண்களின் நிலை என்ன?

வவுனியாவில் பேருந்தொன்றில் பாடசாலை மாணவியொருவருக்கு ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் சேஷ்டை செய்ததால் வவுனியாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாலியல் சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை பேருந்தில் பயணித்த தமிழ் மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும் சம்பந்தப்பட்ட இராணுவ சிப்பாயை பொலிசார் காப்பற்றியதால் ஆத்திரமடைந்து மக்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழர் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதால் தமிழ் மக்கள் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் தெளிவு படுத்தியதுடன் இராணுவத்தை அகற்ற அல்லது குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழர்தரப்பில் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தபோதிலெல்லாம் அரச தரப்பில் தமிழர் பகுதிகளில் இராணுவம் மக்களுக்கு உதவி வருவதாக தெரிவித்து வந்தது.

இந்நிலையில் பாடசாலை மாணவிக்கு அதிலும் பலபேர் பயணம் செய்கின்ற பேருந்திலே இராணுவ வீரர் பாலியல் சேஷ்டை புரிகிறார் என்றால் தனிமையில் வாழும் தமிழ் பெண்களின் நிலை என்ன? அவர்களுக்கு யார் பாதுகாப்பு என சமூக வலைத்தளங்களில் பரவலாக கேள்வி எழுப்பி வருவதுடன், தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்..

வவுனியாவில் இருந்து மெனிக்பாம் நோக்கிச் சென்ற அரச போக்குவரத்து சபைக்குரிய பயணிகள் பேரூந்தில் குருமன்காட்டு பகுதியில் வைத்து 15 வயதான காமினி மகா வித்தியால மாணவியிடம் அந்த பேரூந்தில் பயணித்த இராணுவச் சிப்பாய் பாலியல் சேஷ்டை செய்துள்ளார்.

அத்துடன் தொலைபேசி இலக்கத்தை தருமாறும் மாணவியை வலுக்கட்டாயப்படுத்திய நிலையில் இராணுவ சிப்பாயின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் சிங்கள மாணவி சத்தமிட்டு அழுதுள்ளார்.

இதனையடுத்து அவருடன் பேரூந்தில் பயணித்த சக பயணிகள் மாணவியிடம் சென்று வினவியபோது இராணுவ சிப்பாயின் பாலியல் தொல்லை குறித்து முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து பேரூந்தை சாரதி நிறுத்தியதை அடுத்து பாலியல் தொல்லை கொடுத்த இராணுவச் சிப்பாய் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

எனினும் பேரூந்தில் பயணித்த மக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து இராணுவ சிப்பாயை மடக்கிப் பிடித்து, குருமன்காட்டு பகுதியிலுள்ள காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறிது நேரத்திலேயே இராணுவச் சிப்பாய் அவ்விடத்தில் இல்லாததை அவதானித்த பொதுமக்களும் இளைஞர்களும், சந்தேகநபரை தப்பிக்க விட்டதாக தெரிவித்து பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மேலதிகமாக 10 ற்கும் மேற்பட்ட பொலிஸார் குருமன்காட்டு சோதனைச் சாவடிக்கு வரவழைக்கப்பட்டனர்.

அதேவேளை பாலியல் சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆத்திரத்தில் இருந்த பொது மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் பொலிஸாரின் கூற்றில் நம்பிக்கை கொள்ளாத மக்களும் இளைஞர்களும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து முற்றுகையிட்ட மக்களைச் சந்தித்த வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தேக நபரான இராணுவச் சிப்பாயை கைதுசெய்திருப்பதாக கூறியுள்ளார்.

அத்துடன் இராணுவச் சிப்பாயை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறியுள்ளனர். எனினும் கைதுசெய்த இராணுவ சிப்பாயை காண்பிக்க வேண்டும் என பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டிருந்த மக்கள் வலியுறுத்தினர்.

எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை காண்பிடிக்க முடியாது என வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்ததை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மாணவி, பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரிடம் வவுனியாப் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துகொண்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி உடனடியாக பொலிஸ் நிலையத்தற்கு சென்று மாணவியின் பாதுகாப்பு குறித்தும வவுனியா பொலிஸாருடன் கலந்துரையாடியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: