எழுபது ஆண்டுகள் கடந்தும் தேசியப்பிரச்சினைக்கு தீர்வில்லை- தாய்லாந்து பிரதமரிடம் சம்பந்தன் சுட்டிக்காட்டு

எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தன்னை சந்தித்த தாய்லாந்து பிரதமரிடம் சுட்டிக் காட்டினார்.

இலங்கைவந்துள்ள தாய்லாந்தது பிரதமர் இன்றையதினம் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இருநாட்டுக்குமிடையில் உள்ள நீண்டகால உறவினை எடுத்துக்காட்டிய இரா. சம்பந்தன் அவர்கள் கடந்த காலங்களில் தாய்லாந்து அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு தனது பாராட்டுதல்களை தெரிவித்தார்.கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தத்தின் நிமித்தம் இலங்கை பாரிய முன்னேற்றங்களை அடைய முடியவில்லை என்பதனை சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன் அவர்கள், எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதனையும் சுட்டிக் காட்டினார்.

சமகால அரசாங்கம் இது தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய இரா சம்பந்தன் அவர்கள் சுய கெளரவம் மற்றும் சமத்துவம் அடிப்படையிலான ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக சமாதானமான ஒரு தீர்வினையே நாம் எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் அத்தகைய ஒரு அரசியல் அதிகாரப்பகிர்வை கொண்டுவருவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பினை வழங்குவோம் எனவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை புத்த பெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாக சரியாக செய்வதன் மூலம் அடைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

பாரிய முதலீடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணப்படும் தேவையை வலியுறுத்திய அதேவேளை தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் அவர்களை கேட்டுக்கொண்டார்.

மேலும் வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புக்கான தேவை அதிகமாக உள்ளதனையும் அவர்களது பொருளாதார நிலைமை சீர் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தாய்லாந்து முதலீட்டாளர்களினால் வடக்கில் நிறுவப்படவுள்ள சீனித்தொழிற்சாலை தொடர்பிலான முன்னேற்பாடுகளை வரவேற்ற இரா. சம்பந்தன் அவர்கள் இந்த வகையிலான முதலீடுகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்களுக்கு அதிகமாக கொண்டுவரப்படவேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.

மேலும் மிக கடினமான உழைப்பாளிகளை கொண்ட இப்பிரதேசங்களின் அபிவிருத்தியில் யுத்தம் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியதனை எடுத்துரைத்த இரா சம்பந்தன் அவர்கள் புதிய முதலீடுகள் வடக்கு கிழக்கில் மாத்திரமல்லாது முழு நாட்டு மக்களினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த தாய்லாந்து பிரதமர் அவர்கள் நிச்சயமாக தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு ஊக்கப்படுத்துவேன் என உறுதியளித்த அதேவேளை எதிர்காலத்தில் இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வருவதனை உறுதி செய்து அவற்றுக்கு ஆதரவு நல்குமாறும் எதிர்க்கட்சி தலைவர் அவர்களை வேண்டிக்கொண்டார்.

எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் அவர்களோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

-http://eelamnews.co.uk

TAGS: