ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் மேற்குலக நாடுகள்?

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நீக்கிக்கொள்ளுமாறு அமெரிக்காவும் பிரித்தானியாவும் உடனடியாக பரிந்துரைக்க வேண்டும் என்று பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினரான நேஸ்பி பிரபு வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவிற்கான பிரித்தானிய பாராளுமன்ற குழுவின் தலைவராக இருக்கும் நேஸ்பி பிரபு கடந்த யூன் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட பிரித்தானிய உளவுத்துறையின் அறிக்கை மற்றும் பாதுகாப்பு பேரவையின் அறிக்கை ஆகியவற்றை ஆராய்ந்த நிலையிலேயே இந்த பரிந்துரையை முன்வைத்திருக்கின்றார்.

பிரித்தானிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு பேரவை ஆகியவற்றின் புதிய அறிக்கைகளுக்கு அமைய பிரித்தானியாவும் – அமெரிக்காவும் சிறிலங்கா அரச படையினர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றங்களை போன்ற குற்றங்களை இழைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.

இதனால் சிறிலங்காவிற்கு எதிராக 2015 செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக்கூறல் மற்றும் மீள் நிகழாமை தொடர்பான தீர்மானத்தை விலக்கிக்கொள்ள மனித உரிமைகள் பேரவைக்கு பிரித்தானியாவும் – அமெரிக்காவும் பரிந்துரைக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அரசின் மிக நெருங்கிய நண்பரான நேஸ்பி பிரபு வலியுறுத்தியுள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்களை நிறுவியமை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை மற்றும் காணாமல் போனோர் அலுவலகமொன்றை அமைத்து காணாமல்போனோர் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண முற்பட்டுள்ளமை ஊடாக சிறிலங்கா அரசு தனக்கு எதிராக சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளுக்கு சாதகமான முறையில் பதிலளிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறி நேஸ்பி பிரபு சிறிலங்கா அரசை பாராட்டியுள்ளார்.

சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினருக்கு எதிராக சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கக்கூடியதாக மேற்குலக நாடுகள் சில ஆதாரங்களை வெளியிட்ட போதிலும், யுத்தக் குற்றங்கள் என்று கூறும் சம்பவங்கள் தொடர்பான முழுமையான ஆதாரங்களை வெளியிடாது மூடி மறைத்து வருவதற்கு பின்னணியொன்று இருப்பதாகவும் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றங்கள் என்று கூறும் சம்பவங்கள் தொடர்பான முழுமையான ஆதாரங்களை இந்த மேற்குலக நாடுகள் வெளியிட்டால், சிறிலங்கா அரசுக்கும், அதன் படையினருக்கும் எதிராக எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது என்று தெரிந்த படியாலேயே அவற்றை மூடி மறைப்பதாகவும் நேஸ்பி பிரபு மேலும் தெரிவித்திருக்கின்றார்.

-athirvu.in

TAGS: