ஸ்ரீலங்கா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய அமைச்சர்!

சிறிலங்கா பொலிசாரின் தடுப்பில் இருக்கும் சந்தேகநபர்கள் மோசமான சித்திரவதைகளுக்கு ஆளாவதாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவும் தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களை சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

அப்பாவிகளை கைதுசெய்யும் பொலிசார் அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கு பிரதான காரணம் அவர்களிடமிருந்து கப்பம் பெறுவதற்காகவே என்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் நிரந்தர அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேவேளை பொலிசாரின் தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர்களை வெளியில் அழைத்துச் சென்று அவர்கள் தப்பிச் செல்ல முற்படுவதாகவும், பொலிசார் மீது தாக்குதல் நடத்த முற்பட்டனர் என்றும் கூறி அவர்களை படுகொலை செய்யும் கலாசாரமும் தொடர்ந்தும் நீடித்து வருவதாகவும் சரத்பொன்சேகா மேலும் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

“ பொலிசார் கப்பம் பெறுவதோடு, குற்றவாளிகளுடன் இணைந்து குற்றவாளிகளை பாதுகாத்தும் வருகின்றனர். பொலிசாரின் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கு பல தடவைகள் முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. அதேவேளை போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பொலிசாரும் இருக்கின்றனர்.

அவர்களும் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக எமக்கு தகவலக்ள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அப்பாவி இளைஞர்கள் உட்பட ஆட்களை கைதுசெய்து தலைகீழாக தொங்கவிட்டு, பொலித்தீன் பைகளால் முகத்தை மூடி கட்டி, கண்களுக்குள் மிளகாய் தூளைத் தூவி சித்திரவதையும் செய்து வருகின்றனர்.

குறிப்பாக எனது பிரதேசமான பேலியகொட பகுதியில் ஜேம் போத்தலொன்றை வைத்திருந்த இளைஞர் ஒருவரை கைதுசெய்து அவர் மீது கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டு சுமத்திய சம்பவமும் இடம்பெற்றிருக்கின்றது. கப்பம் பெறும் நோக்கிலேயே இவ்வாறான அநீதியான செயல்களில் பொலிசார் ஈடுபடுகின்றனர். அதனால் இவ்வாறான நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். பொலிசார் மிகவும் ஒழுக்கமாகவும், சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும்.

பொலிசாரால் இவ்வாறான கொடூரங்களை “கோட்டாபய ராஜபக்ச யுகத்தில் இடம்பெற்ற சம்பவங்களாக அடையாளப்படுத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, போதைப்பொருளை ஒழிக்கும் செயற்திட்டத்தில் இராணுவத்தை இணைத்துக்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

“ போதைப்பொருள் ஒழிப்பிற்கான பொறுப்பை இராணுவத்திடம் ஒப்படைப்பது சரியான தீர்மானமாக நான் கருதவில்லை. இது இராணுவத்திற்குரிய கடமையும் அல்ல. பொலிசார் இதற்காக இருக்கின்றனர். பொலிசாரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். பொலிசாருக்கு ஆதரவாக எஸ்.ரி.எப் செயற்பட முடியும். ஆனால் அதற்கு முன்னதாக எஸ்.ரி.எப் இனர் சரியான பாதையில் வழிநடத்தப்பட வேண்டியது அவசியம். ஏனெனில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யும் நபர்களிடம் துப்பாக்கிகள் இருந்ததாகவும், கைக் குண்டு இருந்ததாகவுத் சோடிக்கப்பட்ட கதைகளைக் கூறி அவர்களை படுகொலை செய்ய இடமளிக்க முடியாது.

ஏனெனில் கடந்த நாட்களில் எஸ்.ரி.எப் அவ்வாறான செயல்களை செய்திருக்கின்றனர். இந்த சம்பவங்கள் மிகவும் மோசமான மனிதாபிமானமற்ற செயல்கள். கோட்டாபய ராஜபக்ச அவர்களது ஆட்சியில் இவ்வாறான கொடூரங்களை செய்திருந்தனர். நல்லாட்சியின் கீழ் இவ்வாறான கொடூரங்களுக்கு இடமளிக்க முடியாது. யுத்தமொன்று மூண்டுள்ளதாக சோடிக்கக் கூடாது. சட்டத்திற்கு உட்பட்டு பொலிசார் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றினாலே போதைப் பொருளை ஒழிக்க முடியும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சின் ஆட்சியிலும் அதேபோல் மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய ஆட்சியிலும் சித்திரவதைகள் நாளாந்த சம்பவங்களாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையொன்றில் குற்றம்சாட்டியிருந்தது.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபைக்கு சிஙிலங்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கியிருந்த அறிக்கையொன்றிற்கு அமைய சிறிலங்காவில் சித்திரவதைகள் சாதாரண நிகழ்வுகளாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதை அடுத்து பொலிசார் உட்பட அரச படையினரின் சித்திரவதைகள் காரணமாக எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டு யஸ்மின் சூக்கா தலைமையிலான சிறிலங்காவின் நீதிக்கும் நியாயத்திற்குமான அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இந்தத் தகவலை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பும் தனது அறிக்கைகளில் சுட்டிகாட்டியிருந்தது. இந்த நிலையில் மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புலனாய்வுச் செய்தியொன்றை அண்மைய AP செய்திச் சேவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: