இலங்கை: ‘தூக்கிலிட கயிறு தயாராக இருக்கின்றது; ஆனால், ஊழியர்கள் இல்லை’

இலங்கை சிறைச்சாலையில் மரண தண்டனையை அமல்படுத்துவதற்கான (தூக்கில் இடுவதற்கான) கயிறு தயாராக இருக்கின்றது. எனினும், அதனை இயக்குவதற்கான ”அலுகோசு” ஊழியர்கள் இல்லை என்று சிறைச்சாலைப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

இலங்கையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிறது. போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, குற்றவாளியாகக் காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அதனை அமல்படுத்த அமைச்சரவை கடந்தவாரம் இணக்கம் கண்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுவந்த தீர்மானத்திற்கே அமைச்சரவை இணங்கியுள்ளது. எனினும், மரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை.

”போதைப்பொருள் வியாபாரம் செய்த குற்றத்திற்காக மரண தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள் சிறையில் இருந்துகொண்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். நாட்டில் போதைப் பொருளை விநியோகிக்கின்றனர்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் கடந்த வாரம் நடந்த நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

எனினும், மரண தண்டனையை இலங்கையில் மீண்டும் அமல்படுத்துவதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் குறித்து பி.பி.சி. தமிழிடம் பேசிய சிறைச்சாலை செய்தி தொடர்பாளர்.

இலங்கை சிறையில்

”போதைப்பொருள் வர்த்தகம் செய்த குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 18 கைதிகள் இலங்கை சிறையில் உள்ளனர். இவர்களைத்தவிர வெளிநாட்டவர் சிலரும் இருக்கின்றனர்” என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

இலங்கையில் நடைமுறையில் இருந்த மரண தண்டனை இடைநிறுத்தப்பட்ட 1970ஆம் ஆண்டுகளின் பின்னர், பல குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 363 கைதிகள் சிறைகளில் இருக்கின்றனர். மரண தண்டனை விதிக்கப்பட்டு, அந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள மேலும் 871 பேர் சிறைகளில் உள்ளனர் என்று சிறைச்சாலைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள சிறைகளில் வெலிகடை சிறைச்சாலையில் மட்டுமே தற்போது மரண தண்டனையை அமுல்படுத்தும் ஏதுநிலை இருப்பதாக சிறைச்சாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.

அலுகோசு

மரண தண்டனை மீண்டும் அமல்படுத்தப்பட்டால், அதற்குத் தயாராகும் பணிகளை சிறைச்சாலை திணைக்களம் 2013ஆம் ஆண்டு முன்னெடுத்திருந்தது. தூக்கிலிடப் பயன்படுத்தும் கயிறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. எனினும், மரண தண்டனையை அமுல்படுத்த ”அலுகோசு” என்றழைக்கப்படும் தூக்குத் தண்டனை மேடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான வெற்றிடம் நிலவுகிறது. இதற்கு முன்னர் பலர் இந்தப் பணிகளுக்காக உள்வாங்கப்பட்டனர்.

எனினும், அவர்கள் இடைவிலகிச் சென்றனர். ‘அலுகோசு’ பதவிக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதில் சிரமம் இருக்கிறது. 2013ஆம் ஆண்டு அலுகோசு பணிக்காக இருவர் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் திடீரென இடைவிலகிச் சென்றனர். அதன்பின்னர் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் இன்னுமொருவர் நியமிக்கப்பட்டார். ஒருவார கால பயிற்சியின் பின்னர் அவரும் இடைவிலகிச் சென்றார். மரண தண்டனையை அமுல்படுத்துவது என அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுத்தால் அவர்களை இணைத்துக் கொள்வோம். என்று சிறைச்சாலைத் திணைக்களப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

இலங்கை

பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரமும், மோசமான திட்டமிட்ட குற்றச்செயல்களும் நாட்டில் அதிகரித்துவரும் நிலையில், மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து அண்மைக்காலமாக நாட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஹோகந்தர படுகொலை, மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை, ஆறு வயது சிறுமி சிவனேஸ்வரன் றெஜினா கொலை, பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை ஆகிய சம்பவங்கள் சமூகத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறான குற்றங்களைத் தடுக்க மரண தண்டனையை மீள அமுல்படுத்த வேண்டும் என்ற வலுவான கருத்து சமூகத்தின் ஒரு தரப்பினர் மத்தியில் மேலெழுந்துள்ளது.

மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என்று சமூகத்தில் எழுந்த கோரிக்கைக்கு சாதகமாக தனது முதலாவது அறிவிப்பை 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தற்போதைய ஜனாதிபதி வெளியிட்டிருந்தார். நாடாளுமன்றம் அனுமதி வழங்கினால், மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதாக ஜனாதிபதி அப்போது தெரிவித்திருந்தார்.

எனினும், இலங்கையில் மரண தண்டனையை தடைசெய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அப்போது வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தார்.

இலங்கை

இந்த நிலையில், மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என்ற ஜனாதிபதியின் யோசனைக்கு தற்போது அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருந்தாலும், அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் சிலர் தனிப்பட்ட ரீதியாக மரண தண்டனையை எதிர்ப்பதாக செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் அமுல்செய்வதற்கு சர்வதேச மன்னிப்புச் சபை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. மரண தண்டனையை மீண்டும் அமுல்செய்வதன் மூலம் 40 வருடங்களுக்கு மேலாக இலங்கைக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என இதுகுறித்து பேசிய சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய வலயத்திற்குப் பொறுப்பான பிரதி பணிப்பாளர் தினுஷிகா திசாநாயக்க தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு அதிக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) 2017ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. தரவுகளை உறுதிப்படுத்திப் பெறுவதில் சிரமங்கள் இருந்தாகவும், எனினும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஈரான் இரண்டாம் இடத்தில் இருந்ததாகவும், அங்கு 567 பேருக்கும், சவுதி அரேபியாவில் 154 பேருக்கும், ஈராக்கில் 88 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தெற்காசிய வலய நாடுகளில் 2016ஆம் ஆண்டு அதிக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகளில் பாகிஸ்தான் முதலிடம் வகிப்பதாக (87 பேருக்கு) அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைத்தவிர பங்களாதேஷில் 10 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு இறுதியில் உலகில் 141 நாடுகளில் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் 57 நாடுகளில் மரண தண்டனை அமுலில் இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. -BBC_Tamil

TAGS: