விஜயகலா விவகாரம்: வடக்கு முதலமைச்சரிடம் சி.ஐ.டி யினர் விசாரணை

விடுதலைப் புலிகளின் மீள்வருகையை வலியுறுத்தும் வகையிலான விஜயகலாவின் உரை நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் யாழ். பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில், குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இந்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இன்று காலை, குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்த ஊடகவியலாளர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்த நிலையிலேயே தற்போது முதலமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் விஜயகலா விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கின் அட்டூழியங்களை கட்டுப்படுத்த விடுதலை புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என அண்மையில் யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

அவரது இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், விஜயகலாவின் கருத்து அரசியலமைப்பு மீறும் வகையில் அமைந்திருப்பின் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://eelamnews.co.uk

TAGS: