கரும்புச் செய்கைக்காக சீன அரசாங்கத்தின் கம்பனிக்கு மட்டக்களப்பு குடும்பிமலையில் 68250 ஹெக்டேயர் காணி வழங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – குடும்பிமலையில் இலங்கை அரசாங்கம் சீன அரசாங்க கம்பனி ஒன்றுக்கு கரும்புச் செய்கைக்கு காணி வழங்க இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாருக்கு இன்று புதன்கிழமை (18) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு (கிரான்), ஏறாவூர்பற்று (செங்கலடி) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்டதான குடும்பிமலை பகுதிக்கு அண்மித்து 68250 ஹெக்டேயர் காணியை இலங்கை அரசாங்கம் யாருக்கும் தெரியாமல் சீன அரசாங்க கம்பனி ஒன்றுக்கு கரும்புச் செய்கைக்கு வழங்க இரகசிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது என சில ஆதாரங்களுடன் அறிந்துள்ளேன்.
இதேவேளை கரும்புச் செய்கையானது நில வளத்தை பாதிப்பதுடன், மக்கள் எதிர்காலத்தில் பஞ்சத்தில் வாழ வழியேற்படுத்தும் முன்பு சிங்கள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கரும்புச் செய்கை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இக்கரும்புச் செய்கையை தமிழ் மக்களின் வாழிட பகுதிக்கு கொண்டு வருவது தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதிக்க செய்யும் நோக்கமாகும்.
எனவே இத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்த அனுமதிக்க முடியாது. இத்திட்டம் சார்பாக ஆராயும் முகமாக வரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் இச்செயற்பாடு சார்பாக ஆராய்வதற்கு இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ள கடித்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாகம, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி.அனுர தர்மதாஸ, செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்னம், கிரான் எஸ்.ராஜ்பாபு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-http://eelamnews.co.uk