அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இருந்த போது பாதுகாப்பு என்ற போர்வையில் போர்க்குற்றங்கள் உட்பட பலவிதமான அட்டூழியங்களை சிறிலங்கா இராணுவத்தினர் உட்பட அரச படையினர் புரிந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் கடுமையாக சாடியுள்ளார்.
எனினும் அந்த சட்டம் தற்போது நடைமுறையில் இல்லாத நிலையில் வைத்தியசாலைகளிலோ அல்லது அரச அலுவலகங்கள் மற்றும் திணைக்களகங்களுக்குகோ சென்று இராணுவத்தினர் விபரங்களை திரட்டுவது என்பது சட்டவிரோதமான செயல் என்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலைகளில் அண்மையில் குழந்தைகளை பிரசவித்த தாய்மார்களின் விபரங்களை திரட்டுவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இராணுவத்தினருக்கு எந்தவொரு தகவல்களையும் வழங்கக் கூடாது என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கண்டிப்பான உத்தரவொன்றை வட மாகாண அரச பணியாளர்களுக்கு விடுத்திருந்தார்.
யூலை 12 ஆம் திகதி இடம்பெற்றிருந்த இந்த சம்பவத்தை அடுத்து வட மாகாண முதலமைச்சருக்கு இராணுவத்தினர் தகவல்களை சேகரிப்பபை தடுக்க முடியாது என்றும், அவ்வாறு அவர் கூறியிருப்பது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடு என்றும் குற்றம்சாட்டியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் மஹிந்தவாதிகள், முதலமைச்சரை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
தென்னிலங்கை அரசியல்வாதிகளின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், “ இன்னமும் அவசரகால நிலைமை நீடிப்பதாக படையினர் நினைக்கின்றார்கள். அவசரகாலச் சட்டம் இல்லாத தற்காலத்தில் எந்த ஒரு அரச நிறுவனத்திற்கு சென்றும் விபரங்கள் சேகரிப்பதென்றாலும் அவை அந் நிறுவனங்களின் தலைமை அதிகாரியின் அனுமதியுடனேயே நடைபெற வேண்டும். தம்பாட்டுக்குப் போய் பாதுகாப்பு என்ற அடிப்படையில் எதுவும் கேட்க முடியாது. அதற்கு சட்டம் இடம்கொடுக்காது என்றார்.
பாதுகாப்பு என்ற போர்வையில் பலவிதமான அட்டூழியங்களைப் படையினர் இது வரைகாலமும் புரிந்துள்ளார்கள் என்றும் குற்றம்சாட்டிய முதலமைச்சர் இவற்றில் போர்க்குற்றங்களும் அடங்குகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
இதனாலேயே பாதுகாப்பு படையினரின் முறையற்ற நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்துரைப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், போர்முடிந்து 9 வருடங்கள் நிறைவடைந்த பின்னரும் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களை தொடர்ச்சியாக பயமுறுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் படையினர் அந்தப் பாதுகாப்புக்கான காரணங்கள் என்ன என்பதை வட மாகாண சபையுடன் பேசி முடிவுக்கு வர வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிடமிருந்து பாதுகாப்புத் தேவைப்படுகிறதா உள்நாட்டில் தேவைப்படுகின்றதா என்பதை அவர்கள் கூற வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு வேண்டுமெனில் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ள அவர்,. ஆனால் வெறுமனே பாதுகாப்பென்று கூறிக்கொண்டு மக்களின் காணிகளைப் பிடித்துக் கொண்டும் வருவாயை எடுத்துக் கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சிறிலங்கா இராணுவத்தினர் நினைத்தவாறு வைத்தியசாலைகளுக்குள் நுழைந்து தரவுகளை சேகரித்தால் பொலிசாரின் அதிகாரங்களை படையினர் கைவசப்படுத்தியதாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இராணுவத்தினர் இவ்வாறான புள்ளி விபரங்களை வைத்தியசாலைகளில் இருந்து சேகரிக்க வேண்டுமென்றால் பொலிசாரை நாடி அவர்கள் ஊடாகவே இதைச் செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர், இராணுவத்தினருக்குப் போர்க்காலம் போல் இப்பொழுதும் அதிகாரங்கள் இருப்பதாக நினைப்பது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வடமாகாணத்தில் படையினர் தொடர்ந்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அரசியல் காரணங்களே அவர்களை வட மாகாணத்தில் நிலை நிறுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
வட மாகாணத்தில் வாழும், மக்களுக்கும் – இராணுவத்தினருக்கும் இடையிலான மிக நெருக்கமான உறவைப் பிரிக்க முதலமைச்சர் முற்படுவதாக கடந்தவாரம் சிறிலங்கா இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க குற்றம்சாட்டியிருந்தார்.
இது குறித்து முதலமைச்சரிடம் வினவிய போது, மகேஷ் சேனாநாயக்க தனது நண்பர் என்று தெரிவித்ததுடன், தமிழ் மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை தான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழ் மக்களுடன் நெருக்கமாக இருப்பதாக காண்பித்து இராணுவம் இன்னும் 1000 வருடங்களுக்கு தமிழர் பிரதேசங்களில் நிலைகொள்ள எத்தனிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதனால் பாதிப்படையப்போவது தமிழ் மக்களே என்று சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர், இராணுவத்தின் வேலை வடமாகாணத்தில் முடிவடைந்தபடியால் அவர்கள் திரும்ப கொழும்பு செல்வதே முறையானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதனையும் மீறி இராணுவம் தரித்து நிற்க வேண்டுமென்றால் நான் ஏற்கனவே கூறியுள்ளது போல், ஒன்பது மாகாணங்களுக்கும் சரிசமமாக “இராணுவத்தை ஒன்பதாகப் பிரித்து அதில் ஒரு பங்கை வேண்டுமெனில் வட மாகாணத்திலும் நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அதனைவிடுத்து மக்களுக்கு சலுகைகளையும் பணத்தையும் கொடுத்து இராணுவம் தொடர்ந்தும் தமிழர் பகுதிகளில் நிலைத்து நிற்க நினைப்பது அவர்கள் தமிழ் மக்களை தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே ஒழிய தமிழ் மக்கள் மீது கரிசனை இருப்பதால் அல்ல என்றும் விசனம் வெளியிட்டிருக்கின்றார்.
இராணுவத்தினதும், சிறிலங்கா அரசினதும் இந்தக் கபட நாடகங்களை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கும் வட மாகாண முதலமைச்சர், பெரும்பான்மையினரின் அரசியலுக்கு சாதாரண தமிழ் மக்களின் வறுமையைப் பாவித்து இராணுவத்தினர் உதவ வருவது சரிபோல் தெரிந்தாலும், எதிர்காலத்தில் பாதிக்கப்படப் போவது தமிழ் இனமே என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
-athirvu.in