படைக்குறைப்பு நடக்காது – நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு உறுதி

சிறிலங்கா இராணுவம் அல்லது ஏனைய பாதுகாப்பு பிரிவுகளின் அளவு குறைக்கப்பட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று உறுதியளித்துள்ளது.

சிறிலங்கா இராணுவ முகாம்கள் மூடப்பட்டு, படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளதாக  வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் தினேஸ் குணவர்த்தன கேள்வி எழுப்பினார்.

“எமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, 33 படைப்பிரிவுகளைச் சேர்ந்த 1000 அதிகாரிகள் உள்ளிட்ட 24,266 இராணுவத்தினர் நீக்கிக் கொள்ளப்படவுள்ளனர்.

வடக்கு உள்ளிட்ட நாடெங்கும் 100 இராணுவ முகாம்கள் மூடப்படவுள்ளன. 1000 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மறுள்ளப்பட்டுள்ளது.

இது போர் வீர்ர்களைப் பழிவாங்கும் செயல்.  ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்  உத்தரவுகளின் படியே இது நடக்கிறது. இது எமது படையினரின் உளவுரணை உடைக்கும். இதற்கு நாம் இடமளிக்கக் கூடாது” என்று அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தின் பலத்தைக் குறைக்கப் போவதாக, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதுபற்றிய உண்மையான நிலைமைகள் குறித்து விளக்கமளிப்பதற்கு, எதிர்க்கட்சியினருடன் கலந்துரையாடுவதற்குத் தாம் விருப்பம் கொண்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க எனக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

சிறிலங்கா இராணுவம், தனது சேவைகளை மட்டுப்படுத்தும் சில யோசனைகளை முன்மொழிந்திருந்த்து. அதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

இராணுவத்தை மறுசீரமைக்கும் முடிவு இராணுவத்தினாலேயே எடுக்கப்பட்டது. அதனை நானோ, சிறிலங்கா அதிபரோ எடுக்கவில்லை.

பாதுகாப்பு படைகள் தொடர்பான முடிவுகளை இராணுவ அதிகாரிகளே எடுக்கிறார்கள். அதில் அரசாங்கம் எதுவும் செய்வதில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரித்தானிய இராணுவமும் கூட மறுசீரமைப்புச் செய்யப்பட்டது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா பாதுகாப்புப் படைகள், முக்கியமான பங்கை வகிக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன,

“சில பிரிகேட்கள் இணைக்கப்படலாம். ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் படையினரின் எண்ணிக்கை குறைந்து விடாது.

இராணுவம் குறைக்கப்பட்டு, பலவீனமடைந்திருப்பதாக யாரேனும் உணரலாம். ஆனால் அது உண்மையல்ல.

இராணுவத்தில் பணியாற்றும் படையினரின் எண்ணிக்கை மற்றும் இராணுவ பயிற்சியைப் பொறுத்தவரையில் இது பலவீனமல்ல.

நிர்வாக காரணங்களுக்காக இராணுவமே மறுசீரமைப்பு திட்டம் குறித்து முடிவு செய்தது.

வடக்கில் எந்த இராணுவ முகாமும் மூடப்படவில்லை. எதிர்காலத்தில்  முகாம்களை மூடுகின்ற திட்டமும் இல்லை.

சில பிரிகேட்களில் குறிப்பிட்டளவு படையினர் இல்லை. எனினும் எந்தச் சூழ்நிலையிலும் இராணுவக் குறைப்பு இடம்பெறாது, என்றும் அவர் கூறினார்.

-puthinappalakai.net

TAGS: