வாகரையில் 500 ஏக்கரை கைப்பற்றும் முயற்சியில் இராணுவம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திலுள்ள கட‌ற்படை இராணுவ முகாம் அமைக்க 500 ஏக்கர் காணி கோரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் (23) வாகரை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனால் விவாதிக்கப்பட்டன.

வாகரையில் இராணுவத்தினர் முகாம் அமைக்கும் முகமாக 500 ஏக்கர் காணியினை கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் கோரியுள்ளனர், இது தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா. உதயகுமாருக்கு, கடிதமொன்றை தான் அனுப்பிவைத்துள்ளதாக யோகேஸ்வரன் எம்.பி, குறிப்பிட்டுள்ளார்.

“மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிருமிச்சை சந்தி என்னும் பகுதியில் கடற்படைக்கு வழங்கப்பட்ட 540 ஏக்கருக்கு முன்னாக மரமுந்திரிகை திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட காணியை இராணுவத்தினர் முகாம் அமைக்கும் முகமாக மேலதிகமாக 500 ஏக்கர் காணியை கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் கோரி உள்ளதாக அறிகின்றேன்.

இராணுவத்தினருக்கு இங்கு காணி வழங்க முடியாது. ஏற்கனவே பல நூற்றுக் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது. எனவே இவ்விடயமாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் இச்செயற்பாடு சார்பாக ஆராய்வதற்கு இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்”.

இக்கடித்தின் பிரதிகள், கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி.அனுர தர்மதாஸ, பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

-eelamnews.co.uk

TAGS: