மைத்திரி ஆட்சியிலும் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படும் தமிழர்கள்!

சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் ஆட்சியிலும் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.

அதேவேளை சிறிலங்காவின் தற்போதைய ஆட்சிக்காலத்தில் இவ்வாறு மோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தொடர்பிலான தகவல்களையும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கின்றது.

ஒரு வருடத்திற்கு முன்னர் சிறிலங்காவிற்கு விஜயம் செய்திருந்த மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் பென் எமர்சன் யூலை 23 ஆம் திகதியான நேற்றைய தினம் ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் வைத்து புதிய அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இதில் சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களும், தமிழ் மக்களை ஒடுக்க தொடர்ந்தும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி வருவதாக தெரிவித்து சிறிலங்கா அரசு மீது பாரதூரமான குற்றச்சாட்டொன்றை சுமத்தியுள்ளார்.

சித்திரவதைகளும், மோசமாக நடந்துகொள்ளும் சம்பவங்களும் நாளாந்த நிகழ்வுகளாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், 2016 ஆம் ஆண்டு இறுதி முதல் அண்மைய நாட்கள் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களில் நூற்றுக்கு 80 வீதமானோர் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சித்திரவதைகள் தொடர்பில் முறையிட்ட போதிலும் அந்த முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தவும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் தயாரில்லை என்றும் எமர்சன் கவலை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான ஆட்சியில் குறைந்த பட்சம் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐ.நா சிறப்பு பிரதிநிதி பென் எமர்சன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களை இலக்கு வைத்து தொடர்ந்தும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டிய பென் எமர்சன், குறித்த சட்டம் அமுல்படுத்தப்பட்ட சம்பவங்களை ஆராய்ந்தால் இந்த உண்மை தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவம், பொலிஸ் உட்பட சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான சித்திரவதைகள் தொடர்பான அறிக்கைகளையும் பென் எமர்சன் தனது புதிய அறிக்கையில் இணைத்துள்ளதுடன், உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்தச் செய்யுமாறும் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றமிழைத்த படையினருக்கு எதிராக தண்டனை வழங்கப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க பகிரங்கமாக அறிவித்துள்ள போதிலும், போர் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள முன்னாள் இராணுவத் தளபதியை பாதுகாப்பதாக சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.

ஜெனரல் ஜகத் ஜயசூரியவையோ அல்லது வேறு எந்தவொரு இராணுவ அதிகாரியையோ தண்டிக்க எந்தவொரு தரப்பிற்கும் இடமளிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த அந்தக் கட்சியின் தலைவரான சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் சிறிலங்காவின் உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பான ITJP-யினால் பிறேசில் தூதுவராக கடமையாற்றிய ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக லத்தின் அமெரிக்க நாடுகளில் போர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்குத் தொடர்ந்திருந்த நிலையிலேயே சிறிலங்கா அரச தலைவர் இவ்வாறு சூளுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: