மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்ப நடவடிக்கை

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் உள்ள மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளன.

ரேடியோ கார்பன் ஆய்வுகளை மேற்கொள்வற்காக இந்த எலும்புக்கூடுகள், புளொரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்படவிருப்பதாக,  மன்னார் மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

”இதற்கான அனுமதி நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் நீதி அமைச்சின் ஊடாக, இந்த எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேடியோ கார்பன் ஆய்வுகளின் மூலம், எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டவர்களின் வயதைக் கண்டுபிடிக்க முடியும்.

நேற்று வரை 54 எலும்புக் கூடுகள் இந்தப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களின் எலும்புக் கூடுகளுடன், 5 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

சில எலும்புக் கூடுகளில் கூர்மையான பொருட்களால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்ட சந்தேகத்துக்குரிய தடயங்கள் உள்ளன.

எனினும் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளாமல் காரணத்தை கண்டுபிடிக்க முடியாது.

இந்தப் புதைகுழியின் ஒரு பகுதியில், சடலங்கள், ஒழுங்காக போடப்பட்டுள்ளன. இன்னொரு பகுதியில் ஒழுங்கின்றிப் போட்டுப் புதைக்கப்பட்டுள்ளன”  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: