யாழ்ப்பாணம் அழிந்துவிடும்; எச்சரிக்கை தகவல்..

யாழில் பல குற்றச்செயல்களும், மர்ம செயல்களும் தொடரும் பட்சத்தில் யாழ்ப்பாணமே அழிந்துவிடும் சூழல் உருவாகுமென சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

செய்தி குறித்து மேலும்.,

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராம உத்தியோகத்தர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் இந்த அட்டூழியத்தை அரங்கேற்றிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு ஜே 100 கிராம அலுவலகரின் அலுவலகத்தினுள் இன்று (30.07.2018) நண்பகல் 12.20 மணியளவில் வாள்களுடன் கும்பலொன்று பிரவேசித்துள்ளது.

இந்தக் கும்பல் கிராம அலுவலகரின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தியதுடன், அலுவலகத்திலிருந்த மடிகணணி, கைத்தொலைபேசி என்பனவற்றை அடித்து உடைத்துள்ளது.

மேலும் அலுவலகத்துக்கு முன்பாக நின்ற முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், சைக்கிள் மற்றும் பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்திய பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை கொக்குவிலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹஏஸ் ரக வான் ஒன்றுக்கு தீவைத்துள்ளது.

அத்துடன் வீட்டிலுள்ள பெறுமதியான பொருள்களையும் வாள்வெட்டுக் கும்பல் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வாள்களுடன் வந்த எட்டு பேர் கொண்ட கும்பலே பட்டப்பகலில் இந்தத் துணிகரச் செயலலில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

வாள்களுடன் புகுந்த கும்பல், வீட்டின் முன் தரித்து நின்ற ஹயஸ் வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியதுடன், அதன் முன் பக்கத்தில் தீவைத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏற்கனவே நேற்றிரவு யாழ்ப்பாணத்தின் ஆனைக்கோட்டை மற்றும் கொக்குவில் ஆகிய இடங்களில் உள்ள 3 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனைக்கோட்டை புது வீதி, பொன்னையா வீதி மற்றும் கொக்குவில் பிரம்படி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்த பெறுமதியான பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது..

கூலிக்கு வன்முறையில் ஈடுபடும் கும்பலே இந்த தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கடந்த ஏழு மாதங்களுக்குள் யாழ் குடாவில் 100-ற்கும் அதிகமான வாள்வெட்டு சம்பங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுப்பதில் பொலிஸார் அசமந்த போக்குடன் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு நாளொரு வண்ணம் பொழுதொரு வண்ணம் யாழில் பல குற்றச்செயல்களும், மர்ம செயல்களும் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்நிலை தொடருமாயின், யாழில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களை நோக்கி செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் யாழ்ப்பாணமே அழிந்து விட வழிவகுக்கும் எனவே அரசும் உடந்தையாக இல்லாது விரைந்து குறித்த குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த கருத்தை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: