யாழில் உலாவும் இந்த மர்மக் குள்ளர்கள் யார்..?

யாழ்ப்பாணம் அராலியில் இனந்தெரியாத குள்ள மனிதர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், உண்மையில் அங்கு என்னதான் நடக்கின்றது என்று குறிப்பிட்ட பிரதேச மக்களுடன் நாம் கலந்துரையாடியபோது அவர்கள் சொன்ன சில விடயங்கள் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது.

இது உண்மையில் சில தரப்பினரால் மக்களைக் குழப்புவதற்காக திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு நாடகமாகத்தான் எண்ணத்தோன்றுகின்றது.

உந்து விசையைக் கொடுக்கவல்ல காலணியை அணிந்த இந்தக் குள்ளர்களால் உயரமான வேலிகள் மற்றும் மதிற்சுவர்களையும் இலகுவாக கடக்கமுடிவதாக நேரில் கண்டவர்கள் வியப்புடனும் பீதியுடனும் கூறுகின்றனர்.

அத்துடன் இவர்களைப் பிடிப்பதற்காக இளைஞர்கள் ஒன்றுகூடி வீதிகளில் நிற்கின்றபோது பொலிஸார் தடுப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வீடுகளுக்கு கல்லால் எறிவதும், மக்களைப் பயப்படுத்தி அச்சுறுத்துவதும், வீட்டுக் கதவுகளுக்கு உதைவதும் இந்தக் குள்ள நபர்களின் செயற்பாடாக உள்ள நிலையில் சில காலத்திற்கு முன்னர் மக்களை அச்சுறுத்திய கிறீஸ் மனிதர்களின் ஞாபகம்தான் வருகிறது.

அப்படியாயின் யார் இந்தக் குள்ள மனிதர்கள்?

கடந்த 2011ஆம் ஆண்டு காலத்தில் யாழ்ப்பாணத்தில் கிறிஸ் மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. மறைந்து நின்று மக்களைத் தாக்கிவிட்டு ஓடும் இந்த மர்ம நபர்களும் இதுபோன்ற காலணி அணிந்திருந்ததாக அப்போது மக்கள் கூறியிருந்தனர்.

குறிப்பாக கிறிஸ் மனிதர்களை பிரதேச மக்கள் விரட்டிக்கொண்டு செல்லுகின்றபோது அவர்கள் அருகிலுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும் கடற்படை முகாம்களுக்குள்ளும் சென்று பதுங்கிக்கொள்வது வழமையான செயற்பாடாகக் காணப்பட்டது.

நாவாந்துறையில் நடந்த சம்பவம் ஒன்றின்போது கடற்படை முகாமிற்குள் ஓடிச் சென்ற கிறிஸ் மனிதன் குறித்து தட்டிக்கேட்ட மக்களுக்கும் கடற்படையினருக்கும் மோதல் நிலைமை ஏற்பட்டமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

தற்பொழுது அராலியில் மக்கள் வீடுகள் மீது கல்லால் எறியும் குள்ளர்களை விரட்டிச் செல்கின்றபோதும் அவர்கள் அதி வேகமாக மறைந்துவிடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களைத் தாக்கவும் இல்லை, களவும் இல்லை எனில் மக்களை இவ்வாறு அச்சுறுத்துவதன் பின்னால் ஏதோ ஒரு காரணம் மறைந்திருப்பது புலனாகின்றது. அந்த காரணத்தின் பின்னார் பலம் வாய்ந்த சக்தி ஒன்று இருந்து இயக்குகின்றது என்பது தெளிவாகின்றது.

ஏற்கனவே வந்த கிறீஸ் மனிதர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பது பற்றியோ, கைதுசெய்யப்பட்ட கிறிஸ் மனிதர்கள் பற்றியோ எந்தத் தகவலும் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில்தான் தற்பொழுது யாழ்ப்பாணத்தின் ஒரு குக் கிராமத்திலிருந்து இந்தப் பிரச்சினை உருவெடுக்கத் தொடங்கியுள்ளது.

அராலியில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினை அராலி மக்களை மட்டுமல்ல, அயல் ஊர்களிலுள்ள மக்களையும் இரவு நேரங்களில் கிலிகொள்ள வைத்துள்ளது. இது எல்லா இடங்களுக்கும் பரவுமா என்பதுதான் அடுத்தகட்ட பிரச்சினையாகவுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு பொறுப்புவாய்ந்த அனைவரும் உண்மை நிலையினைக் கண்டறிய விரந்து செயற்படவேண்டும் என்பதுதான் இங்கே சொல்லக்கூடிய ஓர் விடயமாகும்.!

-athirvu.in

TAGS: