இராணுவத்திற்காக தமிழ் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முடக்கிய பொலிஸார்!

ஸ்ரீலங்கா இராணுவம் தம்மை அடக்குமுறையால் கட்டுப்படுத்துவதாக, இராணுவத்தினரால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேப்பாபிலவை சேர்ந்த குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இராணுவத்தினரின் முறைப்பாட்டிற்கு அமைய, வாழ்வாதாரத்திற்கென தாம் அமைத்திருந்த சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தை அகற்றுமாறு முள்ளியவளைப் பொலிஸார் பணித்துள்ளதாக அந்த குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பமொன்று தமது காணியில், வாழ்வாதாரத்திற்காக ஒரு சிறு எரிபொருள் கடை ஒன்றினை ஆரம்பித்திருந்தனர்.

கேப்பாபிலவில் படைத்தலைமையகம் அமைந்துள்ள இடத்திற்கு முன்னால் அண்மையில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட தமது பூர்வீக நிலத்திலேயே அவர்கள் இந்த எரிபொருள் விற்பனை நிலையத்தை அமைத்துள்ளனர்.

எனினும் இந்த விற்பனை நிலையம், இராணுவத்துக்கு ஆபத்தாக அமையும் என முள்ளியவளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டமைக்கு அமைய கடையை நடத்திச் செல்வதற்கு பொலிஸார் தடைவிதித்துள்ளதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.

இராணுவத்துக்கு பாதுகாப்பு இல்லை என முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் கடையை அகற்றுமாறு முள்ளியவளை பொலிஸார் அறிவித்துள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரை தொடர்புகொண்ட முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவ ஊடக அதிகாரி அவ்வாறான உத்தரவை தாம் வழங்கவில்லை எனவும் அவர்கள் அந்த இடத்தில் கடை நடத்துவதில் தமக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது எரிபொருள் விற்பனை நிலையத்தை நடத்துவதற்கு அனுமதி பெறப்படவில்லை எனவும் அவ்வாறு அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடைக்குரிய அனுமதி இல்லாத நிலையில் இந்தக் கடையை மூடுமாறு அறிவித்துள்ளதாகவும் பொலீஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறான நூற்றுக்கணக்கான எரிபொருள் விற்பனை நிலையங்கள் பல வருடங்களாக இயங்கிவருவதோடு அந்த வியாபார நடவடிக்கைகளுக்கு எவரும் இதுவரையில் தடை விதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கேப்பாபிலவு நிலமீட்புப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி போராட்டத்தை முன்னின்று நடத்திய ஒருவரின் கடையே இவ்வாறு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: