ஈழத்தையே மனிதப் புதைகுழியாக்கிய சிங்களப் படைகள்!

ஈழத்தில் எல்லாமே மண்ணில் புதைக்கப்பட்டிருக்கிறது. யுத்தம் காரணமாக புத்தகங்கள் முதல் வீட்டுப் பாத்திரங்கள் தளவாடங்கள் வரை மண்ணில் புதைக்கப்பட்டிருக்கிறது. அதைப்போலவே ஈழத்தில் அகழும் இடங்களில் எல்லாம் மனித எலும்புக்கூடுகள் கிளம்புகின்றன. சிங்கள இராணுவம் முகாமிட்டிருந்த இடங்கள் முழுவதிலும் தமிழரின் எலும்புக்கூடுகள் மீட்பதே வரலாறாகிவிட்டது. மானுட வரலாற்றையும், தொல்லியல் தடங்களையும் மண்ணில் தேடுவதைப்போல ஈழ மக்களின் எச்சங்களையும் அவர்களின் தாய் மண்ணில் தேடும் அவலச் சூழலுக்கு ஈழம் தள்ளப்பட்டிருக்கிறது.

ஈழத்தில் அண்மைய நாட்களில் இரண்டு இடங்களில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ராஜபக்சேவின் காலத்தில் அகழப்பட்ட மனிதப் புதை குழி. ஈழத்தின் மன்னார் பகுதியில் அரச விற்பனை நிலையம் ஒன்றை அமைக்க மண்ணை அகழ்ந்தபோது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து அகழப்பட்டு எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன. மயானம் என்றால் எலும்புக்கூடுகள் கிளம்பும்தானே என்று கூறி அந்தப் புதை குழி பற்றிய மர்மத்தையே மூடிவிட்டது முன்னைய சிங்கள அரசு.

கடந்த 2014ஆம் ஆண்டில் தோண்டப்பட்ட அந்த மனிதப் புதைகுழியை மீண்டும் தோண்டுமாறு தமிழர்கள் வலியுறுத்திய நிலையில் நீதிமன்றத்தின் கட்டளையின் படி தற்போது மீண்டும் அகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மன்னார் ஈழத் தொன்மங்கள் நிறைந்த பகுதி. மன்னாரில்தான் திருக்கேதீச்சரம் என்ற ஆலயம் இருக்கிறது. திருக்கேதீச்சரம் என்ற ஈழச் சிவாலயம்மீது ஏழாம் எட்டாம் ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தரும் சுந்தரரும் தேவாரப் பதிகங்களைப் பாடியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இடத்தில்தான் ஈழத் தமிழர்களின் எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்களின் பல எலும்புக்கூடுகள் இருப்பதாகவும் அவற்றில் ஊரிய ஆயுதங்களால் தாக்கிய முறிவுகள் காணப்படுகின்றன என்றும் தலைமை மீட்புப் பணியாளர் கூறிய கருத்துக்கள் ஈழத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது சிங்கள அரச படைகளின் பாரிய இன அழிப்பு புதைகுழியாக இருக்கலாம் என்று சந்தேகிகப்படுகின்றது. ஏனெனில் அகழ அகழ பல எலும்புக் கூடுகள் அங்கே மீட்கப்படுகின்றன.

ஈழப் போரின்போதும், போர் முடிந்த பின்னரும், போர் நடக்காத பகுதிகளில்கூட பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்கவும் அவர்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்தவும்கோரி ஈழ மக்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இவை யாருடைய எலும்புக்கூடுகள் என்ற கலக்கம் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

மன்னாரில் இத்தகைய புதை குழி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தின் செம்மணியிலும் மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மற்றுமொரு அதிரச்சி.

செம்மணிப் புதைகுழி அல்லது செம்மணிப்படுகொலை என்பது ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத இன அழிப்பு நிகழ்வு ஆகும். 1998இல் சந்திரிக்கா பண்டார நாயக்கே அதிபராக இருந்த சமயத்தில், யாழ்ப்பாணத்தை படையெடுத்து கைப்பற்றியிருந்தார். அக் காலத்தில் யாழில் பல நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சிங்கள இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இளைஞர்கள் காணாமல் போவது பற்றிய மர்மமத்தை கிருசாந்தி என்ற பள்ளி மாணவியின் படுகொலையே அம்பலப்படுத்தியது.

பள்ளி மாணவி கிருசாந்தி பாடசாலை விட்டு வரும்போது செம்மணி இராணுவ முகாம் அருகில் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டு முகாமுக்குள் கொண்டு செல்லப்பட்டு வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டார். இதனை ஊரார்கள் கண்டனர். பின்னர் கிருசாந்தியை தேடிச்சென்ற அவரது அவரது தாயார் , சகோதரையும் சிங்கள இராணுவம் படுகொலை செய் து புதைத்தது.

கிருசாந்தி படுகொலை சிங்கள அரசுக்கும் படைகளுக்கும் எதிராக யாழில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சோரத்தின ராஜபக்சே என்பவர் கிருசாந்தி கொலையாளியாக கைது செய்யப்பட்டார். அவரே ஏனயை குற்றவாளிகளையும் அடையாளம் காட்டினார். நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தில் அங்கு படுகொலை செய்யப்பட்ட பல நூற்றுக் கணக்கான இளைஞர்கள் பற்றியும் அவரது உடல்கள் புதைக்கப்பட்ட செம்மணிப் புதைகுழிகளையும் அவர் அடையாளம் காட்டினார்.

தற்போது இருபது வருடங்களுக்குப் பின்னர் அப் பகுதியில் நீர்க் குழாய் பொருத்த நிலத்தை அகழந்தபோது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்ச ஈழத்தின் வன்னியில் இன அழிப்பு போரை நடத்திய காலத்திலும் செம்மணி இராணுவ முகாம் பாரிய அச்சுறுத்தலான இராணுவ முகாமாக இருந்தது. அந்தக் காலத்தில் நடந்த படுகொலைகளின் எச்சமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலும் பல நூற்றுக் கணக்கானவர்கள் சிங்கள இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

இதையெல்லாம் தோண்டி எடுத்து சிங்கள அரசு தனக்குத்தானே என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது? இவை தனிப்பட்ட இராணுவச் சிப்பாய்களின் இன அழிப்புச் செயல்களின் ஆதாரங்களல்ல. சிங்கள இராணுவத்தை இன அழிப்புக்காக வழி நடத்திய ஆட்சியாளர்களின் இன அழிப்பின் ஆதாரங்கள். இவற்றுக்கு எல்லாம் தண்டனை வழங்க வேண்டும். ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டும்.

அப்படி நடக்காவிட்டால் இன்னும் பல வருடங்களுக்கு ஈழத் தமிழர்கள் மண்ணை அகழ்ந்து தமது உறவுகளின் எலும்புக்கூடுகளை மீட்டு அடையாளம் காண வேண்டிய நிலைக்கும் வாழ்க்கைக்கும் தள்ளப்படுவார்கள்.

-தீபச்செல்வன்

-குமுதம்

TAGS: